சூலுார்: பொன்னாக்காணி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சூலுார் அடுத்த பொன்னாக்காணி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 15 நாள் சாட்டுடன் ஐப்பசி திருவிழா நடக்கிறது. பக்தர்கள் மாவிளக்கு, பூவோடு எடுத்து பொங்கல் வைத்து வழிபட்டனர். நுாற்றுக்கும் மேற்பட்ட கிடாக்கள் பலியிடப்பட்டன. மடிப்பிச்சை எடுக்கும் வழிபாடும் நடந்தது. அம்மை அழைத்தல், திருவீதி உலா மற்றும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று நடந்த பூஜையில், போகம்பட்டி, இடையர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். புளிமரத்துப்பாளையம், சின்னக்குயிலியில் உள்ள கோவில்களில் திருவிழா நடந்தது.