பதிவு செய்த நாள்
18
நவ
2015
12:11
திருப்பூர்: கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம், நேற்று நடைபெற்றது; பக்தர்களின் "அரோகரா கோஷங்களுக்கு மத்தியில், சூரனை, முருகப்பெருமான் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. திருப்பூரில் உள்ள கோவில்களில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, கடந்த, 12ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. சிவன் மலை சுப்ரமணிய சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், நல்லூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் ஆகிய இடங்களில் நடைபெற்றது. கந்த சஷ்டியை ஒட்டி, நேற்று காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சூரபத்மனை அழிக்க, அவதாரம் எடுத்த முருகப்பெருமான், தாயிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி, மாலை நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், பக்தர்களின் "அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் உலா வந்தார். கஜமுகாசூரன், பானுகோபன், சிங்க முகாசூரன், மகாசூரன் வடிவம் எடுத்து வந்த சூரபத்மனை, வதம் செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று, வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
பொங்கலூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில், சூரசம்ஹார விழா துவங்கியது. சூரனை, முருகப்பெருமான், வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், பக்தர்கள், விரதம் முடித்தனர். இரவு, 7:00 மணிக்கு மேல்அன்னதானம் நடந்தது. இன்று, காலை, 10:30 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவம், அன்னதானம் நடக்கிறது.