பதிவு செய்த நாள்
18
நவ
2015
12:11
ராசிபுரம்: ஆர்.புளியம்பட்டி மகாசக்தி மாரியம்மன் கோவிலில், வரும், 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, புதுச்சத்திரம் யூனியனுக்கு உட்பட்ட ஆர்.புளியம்பட்டியில் மகாசக்தி மாரியம்மன், செல்வ விநாயகர், பெருமள் உள்ளிட்ட கோவில் கோபுரம், கருவரை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் கட்டும் பணிகள் அனைத்தும் நடந்து முடிந்தது. இதைடுத்து, வரும், 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. முன்னதாக, 20ம் தேதி காலை, 9.30 மணிக்கு காவிரி தீர்த்தம் கொண்டு வர புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 21ம் தேதி மாலை தீர்த்தம் அழைத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம், விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, மஹா சங்கல்பம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதனையடுத்து இரவு கோபுர கலசம் வைத்தல், யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், அம்மன் பிரதிஸ்டை செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 22ம் தேதி அதிகாலை இரண்டாம் காலயாக பூஜை, திரவியாகுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, அதிகாலை, 4.30 மணிக்கு செல்வ விநாயகர், பெருமாள், மகாசக்தி மாரியம்மன் உள்ளிட்ட ஸ்வாமிகளின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.