பதிவு செய்த நாள்
19
நவ
2015
11:11
குன்னுார்: குன்னுார் அருகே, ஜெகதளா கிராமத்தில் எத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக துவங்கியது. படுகர் இன மக்களின், நடப்பாண்டுக்கான எத்தையம்மன் திருவிழா, ஜெகதளா கிராம எத்தையம்மன் கோவிலில் துவங்கியது. ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய எட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து இதனை நடத்தினர். இதில், எத்தைக்காரர்கள் எனப்படும் பக்தர்கள், 48 நாட்கள் விரதத்தை, இவ்விழாவின் போது, துவக்கியுள்ளனர். இவர்கள், நேற்று காலை, 8:00 மணிக்கு ஜெகதளா எத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக தாய்வீடான கொதுமுடி கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டனர். இதில், விரதம் மேற்கொண்டுள்ள பூசாரியுடன், எத்தைக்காரர்கள் அணிவகுத்து செல்ல, நூற்றுக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர், மடித்தொரை சுத்தகல் கோவிலில் நடந்த பூஜையில் பங்கேற்று, கிராம மக்களுக்கு ஆசி வழங்கினர். இதைதொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் இந்த பண்டிகை நடக்க உள்ளது. இதற்காக, படகரின கிராமங்கள் தயாராகி வருகின்றன.