பதிவு செய்த நாள்
19
நவ
2015
11:11
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இக் கோயிலில் உள்ள சுப்பிரமணியசுவாமி கந்தசஷ்டி விழா நவ.,12 ல் துவங்கியது. தினமும் சுவாமிக்கு பல்வகை அலங்காரங்கள், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நேற்றுமுன் தினம் சூரசம்ஹாரம் நடந்த நிலையில் 7ம் நாளான நேற்று திருக்கல்யாணம் நடந்தது. அதிகாலையில் சுவாமி, வள்ளி, தெய்வானை தேவியர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மஞ்சள் பட்டுடன் சுப்பிரமணியசுவாமி சஷ்டி மண்டபத்தில் எழுந்தருள அவரை தொடர்ந்து தேவியர்களும் எழுந்தருளினர். திருமணத்தை காண்பதற்காக காசிவிஸ்வநாதர், விசாலாட்சியம்மன் தம்பதி சகிதமாக மண்டபத்தில் எழுந்தருளினர்.
திருமணவிருந்து: வேதமந்திரங்களுடன் சுவாமிக்கு உபநயனம் எனப்படும் பூநூல் அணிவிக்கும் வைபவம், சுவாமி தேவியர் மாலைமாற்று வைபவம் நடந்தது. பின் மேளதாளங்கள் முழங்க, சுவாமி தேவியர் இருவருக்கும் தாலி அணிவித்தார். பக்தர்கள் பூக்களை தூவி வழிபட்டனர். கோயில் நிர்வாக அதிகாரி நாராயணி முன்னிலையில் பக்தர்களுக்கு திருமணவிருந்து நடந்தது. பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை சஷ்டி விழாக்குழு அமைப்பாளர் கதிரேசன் செய்தார்.
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி, தண்டாயுதபாணி, மொட்டமலை முருகன்கோயில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு ஒன்பது நாள்களாக சுவாமிக்கு பாலாபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. எஸ்.ராமலிங்காபுரம், கீழராஜகுலராமன், பேயம்பட்டி பகுதி முருகன்கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முக்கிய நாளான நேற்று பாலசுப்பிரமணியர்கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகபெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.
விருதுநகர்: விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு நிகழ்ச்சியாக முருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வேதமந்திரங்கள் முழங்க நேற்றிரவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.