திருமலைக்கேணி: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. நவ., 12ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சிவ பூஜை, சிவ உபதேசம், அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல், வேல் வாங்குதல் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான "சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது. இறுதி நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. காலை விநாயகர் பூஜை, முருகனுக்கு கல்யாண காப்புகட்டுதல், பூணூல் அணிவிப்பு, விநாயகர் தரிசனம், வள்ளி தெய்வானையுடன் மாலை மாற்றுதல், திருமண யாக பூஜைகள் மற்றும் பாத பூஜை நடந்தது. மாங்கல்ய பூஜை செய்து கோயில் முன் உள்ள மண்டபத்தில் பக்தர்கள் முன்னிலையில் வள்ளி தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.