பதிவு செய்த நாள்
23
நவ
2015
11:11
கரூர் : கரூர் அருகே புகழிமலையில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் பங்கேற்று ஸ்வாமியை தரிசித்தனர். சூரனை வதம் செய்த பின் தெய்வானையை முருகன் திருக்கல்யாணம் செய்து கொண்ட நிகழ்ச்சி புகழிமலை முருகன் கோவிலில் கோலாகலமாக நடந்தது. இதை முன்னிட்டு, கோவில் அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் மணமக்களான முருகன், தெய்வானை வழிபட்டனர். அதன் பின் ஊஞ்சலில் மணமக்கள் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.முருகன், தெய்வானை, சிவன், பார்வதி, வீரபாகு சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். மணமேடைக்கு முன் குண்டம் ஏற்படுத்தி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதினர். இதைத்தொடர்ந்து முருகன், தெய்வானை கழுத்தில் தாலி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பல்வேறு தீபாராதனைகள் நடந்த பின் மகா தீபாராதனை பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடந்தது.மொய்விருந்து செய்த பக்தர்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
* டி.என்.பி.எல்., காகிதபுரம் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள வல்லப கணபதி கோவிலில் அமைந்துள்ள முருகன், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதைத் தொடர்ந்து இரவு, 8 மணிக்கு ஒரு சிறிய தேரில் முருகன்-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களால் கோவிலைச் சுற்றி தேர் வலம் வந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்று திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.