மேட்டுப்பாளையம்: காரமடை அருகேவுள்ள தாயனுாரில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. காரமடை அடுத்த காளம்பாளையம் ஊராட்சி தாயனுார் கிராமத்தில் சர்வசித்தி செல்வ விநாயகர், மாகாளியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இதன் கும்பாபிஷேக துவக்க விழாவில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம்,லட்சுமி ஹோமம் மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடந்தன. இரண்டாம் நாள், இரண்டாம் கால யாக பூஜையும், கோபுரங்களுக்கு கலசங்கள் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு மூன்றாம் கால யாக பூஜையும், கருவறையில் செல்வ விநாயகர் மற்றும் மாகாளியம்மனுக்கு அஷ்டபந்த மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தன. மூன்றாம் நாள் அதிகாலை நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து புனித தீர்த்தக் குடங்களை யாகசாலையில் இருந்து கோவிலைச் சுற்றி எடுத்து வந்து, கோபுரங்களுக்கு கொண்டு சென்றனர். காரமடை ஞானசுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில், செல்வ விநாயகர் கோவில், மாகாளியம்மன் கோவில் கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.