சபரிமலை: காணிக்கை எண்ணும் இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை நிர்வாண சோதனை நடத்த தேவசம்போர்டு ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு தினமும் கோடிக்கணக்கான பணம் காணிக்கையாக வருகிறது. கோயில் முன்பு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை கன்வயர் பெல்ட் மூலம் எண்ணும் இடத்துக்கு செல்கிறது. இதுபோல அனைத்து இடங்களில் உள்ள காணிக்கை பெட்டியில் கிடைக்கும் பணம் இங்கு கொண்டு வரப்பட்டு எண்ணப்படுகிறது. கடந்த மகரவிளக்கு சீசன் நிறைவு பெறும் நேரத்தில் இங்கு பணம் திருடப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. 17 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.இதனால் இந்த ஆண்டு காணிக்கை எண்ணும் இடத்தில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வேஷ்டி மட்டுமே உடுத்து செல்ல வேண்டும். சட்டை மற்றும் உள்ளாடைகள் அணியக்கூடாது. பணி முடிந்து செல்லும் போது வேஷ்டியை அவிழ்த்து உதறி காட்ட வேண்டும். இப்படி நடைபெற்ற சோதனை இங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் டிவியில் தெரிந்தது. இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ச்சி பெற்ற பின்னரும் மனித உரிமை மீறலாக நடைபெறும் சோதனையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருவிதாங்கூர் தேவசம் ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காணிக்கை எண்ணுவதை முழுக்க முழுக்க இயந்திரமயமாக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வயது வித்தியாசம் இல்லாமல் துணிகளை அவிழ்த்து நடத்தும் சோதனையை ஏற்க முடியாது என்று அந்த சங்கம் கூறியுள்ளது.பணத்தை எடுக்க செல்லும் தனலெட்சுமி பேங்க் ஊழியர்கள் வேஷ்டி, துண்டு அணிந்து செல்கின்றனர். ஆனால் இங்கு பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸ் பேன்ட், ஷர்ட் போட்டு நிற்கின்றனர். என்ற கேள்வியையும் ஊழியர்கள் எழுப்பியுள்ளனர்.