பதிவு செய்த நாள்
24
நவ
2015
11:11
கரூர்: கரூர் அருகே, நேற்று முன்தினம் பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கரூர் அடுத்த, பண்டுதகாரன்புதூரில் புதிதாக அமைக்கப்பட்ட பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு, கடந்த, 20ம் தேதி முதல், கும்பாபிஷேக கால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, 5.30 மணிக்கு மூலமந்திர, சக்தி ஹோமங்கள் நடந்த பின் விசேஷ பூஜைக்கு பின் தீபாராதனை நடந்தது. புனித நீர் கலசங்கள் கோவிலைச் சுற்றி வலம் வந்து எடுத்து வந்த பின் கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதன்பின், பால விநாயகருக்கு சந்தனம், பால், தயிர், மஞ்சள், பன்னீர் மற்றும் பல்வேறு திரவிய பொடிகள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பண்டுதகாரன்புதூர் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.