பதிவு செய்த நாள்
24
நவ
2015
11:11
திருவண்ணாமலை: ”திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை மஹா தீப விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது,” என, கலெக்டர் ஞானசேகரன் கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியாக, நாளை (நவ,25) மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. தீப திருவிழாவிற்கு, வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு வசதியாக, 11 தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், தற்காலிக கழிப்பறை, அமைக்கப்பட்டுள்ளது. நகரைச் சுற்றி, 54 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில், 1,131 துப்புரவு பணியாளர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொற்று நோய் பரவாமல் இருக்கும் வகையில், சுகாதாரத்துறை கண்காணிப்பில், கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. 2,400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் சிறப்பு ரயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக பஸ்ஸ்டாண்டுகளில், ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து, பொதுமக்கள் பார்வையில் தெரியும்படி பேனர் வைக்கப்பட்டுள்ளது.
தீபத்திருவிழா பாதுகாப்பு பணியில், 8,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிரிவலப்பாதையில், 56 இடங்களில் கண்காணிப்பு கேமரா, 23 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 34 காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன. கிரிவலப்பாதையில், 14 இடங்களிலும், கோவிலினுள், ஒரு மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நடமாடும் மருத்துவ குழு ஈடுபடுத்தப்பட உள்ளது. 21ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மலையேறும் பக்தர்கள் தீப்பெட்டி, மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அன்னதானம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மஹா தீபத்தன்று, மதுபானக்கடை மூடப்படும். பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், குலுக்கல் முறையில் தங்கம், மற்றும் வெள்ளி நாணயம் வழங்கும் பரிசு திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.