பதிவு செய்த நாள்
01
ஆக
2011
11:08
ஸ்ரீரங்கம்: வேதாரண்யம் கோடியக்கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி திருமண கோலத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரரை வழிபட்டனர். அதேபோல், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.வேதாரண்யம் புராணகால பெருமையுடைய ஷேத்திரமாகும். கோடியக்கரையில் ஆதிசேது என்ற சித்தர் கட்டக்கடலிலும், வேதாரண்யம் சன்னதி கடலிலும், வேதாரண்யேஸ்வரர் கோவில் மணிகர்ணிகை தீர்த்தத்திலும், தங்கள் முன்னோர் நினைவாக பக்தர்கள் திதி கொடுத்து தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடுவது வழக்கம்.இந்தாண்டும் ஆடிஅமாவாசை முன்னிட்டு இறந்துபோன தங்கள் முன்னோர் நினைவாக பிதூர் திதி கொடுத்து அதிகளவில் பக்தர்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் புனித நீராடி திருமணகோலத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரரையும், துர்க்கையம்மனையும் வழிபட்டனர்.தஞ்சை, நாகை, திருவாரூர், பட்டுக்கோட்øடை ஆகிய இடங்களில் இருந்து கோடியக்கரை மற்றும் வேதாரண்யத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் டி.எஸ்.பி., கணேசன் தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர்.அதேபோல், ஆடி அமாவாசை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரிக்கரையில் நேற்று அதிகாலை நான்கு மணி முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. பக்தர்கள் புனித நீராடினர். அம்மா மண்டபத்தில் பக்தர்கள் திரண்டு இருந்ததால் பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஸ்ரீரங்கம் வரும் அனைத்து பஸ்கள், கார்கள் பிற வாகனங்கள் அனைத்தும் திருவானைக்கோவில் வழியாக சென்றது. அம்மா மண்டபம் வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை.ஆடி அமாவாசையன்று விண்ணுலகத்தில் இருந்து பித்ருக்கள் என்றழைக்கப்படும் நம் மூதாதையர்கள் மண்ணுலகம் நோக்கி வருவார்கள். அவ்வாறு வரும்போது நாம் தர்ப்பணம் செய்வது சாலச்சிறந்தது.இதே நாளில் முன்னோரை நினைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அம்மா மண்டபத்தில் புனித நீராடிய பக்தர்கள் தங்கள் தாய், தந்தையரை நினைத்து திதி கொடுத்தனர். பித்ருக்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.தாய், தந்தை மறைந்த திதி நாளில் சிரார்த்தம் செய்வது மகன்களின் கடமை. அவ்வாறு செய்ய இயலாமல் போனவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம். அவ்வாறு திதி கொடுக்க இயலாமல் போனவர்கள் நேற்று அம்மா மண்டபத்தில் திதி கொடுத்தனர்.அம்மா மண்டபத்தில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டதால் சாதாரண உடையில் ஏராளமான போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.