பதிவு செய்த நாள்
30
நவ
2015
01:11
குறிச்சி: குறிச்சி அரவான் திருவிழா, நாளை, பூஜை, ஊர் எல்லை கட்டுதல் மற்றும் உயிர்
பிடித்தலுடன் துவங்குகிறது. விழா நாளை மாலை, 6:00 மணிக்கு, குறிச்சி முதுப்பர் கோவிலில் பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து ஊர் எல்லை கட்டுதல், அரவானுக்கு உயிர் பிடித்தல், கம்பம் நட்டு பூச்சாட்டுதல் நடக்கின்றன.
இதையொட்டி, சவளகுல வேளாளர் சேர்வைகாரர் சமூகம் சார்பில், கிருஷ்ணர் மெல்லிசை குழுவின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி மாலை, 6:00 மணிக்கு, குறிச்சி அரவான் கோவில் மைதானத்தில் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, நாசிக் மேளம் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, 7ம் தேதி வரை, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 8ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, பெருமாள் கோவிலில் அரவான், அனுமார் சுவாமிகள் கட்டுதல் நடக்கிறது. 9ம் தேதி காலை, 6:00 மணிக்கு, அரவான் அலங்கரிக்கப்பட்டு, உருமால் கட்டும் சீர் முடிந்து, பெருமாள் கோவிலிலிருந்து எழுந்தருளுதல் நடக்கிறது.
காலை, 8:00 மணிக்கு, அரவான் குறிச்சி குளக்கரை விநாயகர் கோவிலில் தீர்த்தமாடி, சிறப்பு வழிபாட்டுடன் புறப்படுதலும், மாலை, 6:00 மணிக்கு, அரவான் கோவிலில், அரவான், பொங்கியம்மன் திருமண விழாவும் நடக்கின்றன.
மறுநாள் (10ம் தேதி), மதியம், 12:30 மணிக்கு, அரவான் கோவிலில் நாதஸ்வர கச்சேரியுடன் விழா துவங்குகிறது. மாலை, 6:00 மணிக்கு, குளக்கரை கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 11ம் தேதி காலை, 7:00 மணிக்கு, அரவான் திருவீதி உலா துவங்குகிறது. இரவு, 9:00 மணிக்கு, குறிச்சி, தேவேந்திர குல வேளாளர் சமூக மேடையில் நடக்கும் களப்பலி நிகழ்ச்சியுடன், விழா நிறைவடைகிறது.ஏற்பாடுகளை, குறிச்சி அனைத்து சமூக பெரியதனகாரர்கள் செய்துள்ளனர்.