பதிவு செய்த நாள்
05
டிச
2015
11:12
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை பெய்தும், அய்யனார் குளம் நிரம்பாதது நகர மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் நகரின் மையப் பகுதியான காந்தி சிலை அருகே உள்ளது அய்யனார் குளம். இரண்டு ஏக்கர் பரபரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்திற்கு, கடந்த சில ஆண்டுகளாக, வரத்துக் கால்வாய்கள் முழுவதும் அடைபட்டு போனது.
மழை நீர் முழுவதும் திரு.வி.க., வீதி வழியாக சென்று, காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானம் மற்றும் ரயில்வே பாலம் வழியாகச் சென்று வீணாகிறது. விழுப்புரம் கலெக்டராக இருந்த கோபால், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மேம்படுத்தும் வகையில், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இக்குளத்திற்கு, மழைநீர் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுத்தார். அதனால் கடந்த 5 ஆண்டிற்கு முன், இந்த குளம் முழுவதும் நிரம்பியது. அதன் பின் வரத்து கால்வாய்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குளத்திற்கான நீர் வரத்து தடைப்பட்டது. கடந்த நுõறாண்டுகளுக்கு பின், தற்போது வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. இருப்பினும் இந்த குளத்தில் 25 சதவீதம் கூட, நீர் நிரம்பவில்லை. நகராட்சியின் மெத்தனப் போக்கால், குளத்திற்கான வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் பராமரிப்பு இன்றி, தற்போது அடைபட்டு கிடக்கிறது. இதனால் கோவில் திருவிழா நாட்களில், வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, குளத்தில் விடுகின்றனர். இயற்கையாக மழைக் காலங்களில் இந்த குளம் நிரம்பினால், நகரின் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மூலம், வரத்து கால்வாய் களை சீர் செய்து, அய்யனார் குளத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.