பு.புளியம்பட்டி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்ட தாலி, கழன்று விழுந்து விட்டது. இதனால் ஆண்களுக்கு ஆகாது என்று, புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர் பகுதிகளில் நேற்று தகவல் பரவியது. இதற்கு பரிகாரமாக, வீடுகள் முன்பு கோலமிட்டு, விளக்கேற்ற வேண்டும் என்றும் தகவல் கூறியது. இதனால் மன சஞ்சலம் அடைந்த புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் சுற்று வட்டார கிராமப்புற பெண்கள், வீட்டு வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபட்டனர். இந்த தகவல் வெகு வேகமாக பரவியதால் இப்பகுதிகளில் பெரும்பாலான பெண்கள், தோஷத்தை நிவர்த்தி செய்ய, மேற்கண்ட வழிபாட்டில் ஈடுபட்டனர்.