குப்பை கொட்ட பயன்படும் தெப்பக்குளம்: கோயில் நிர்வாகம் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2015 11:12
மதுரை: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் குப்பை கொட்டுவது தொடர்கிறது. தெப்பத்தை மாசடைய செய்வோரிடம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தின் கீழ், தெப்பக்குளம் பராமரிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் இக்குளம் வறண்டிருந்தது. தற்போது பெய்யும் மழையால் வைகை ஆற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து, குளம் நிரப்பப்படுகிறது. இங்கு மீன் வளர்க்க டெண்டர் விடப்படவுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் குளத்தில் தேங்கும் கழிவுகளை தினமும் அள்ளி வருகின்றனர். எனினும் தெப்பக்குளத்தை குப்பையை கொட்டும் மெகா குப்பை தொட்டியாகவே சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இக்குளத்தைச் சுற்றிலும் காலையில் வாக்கிங் செல்வோருக்கான ‘சூப்’ மற்றும் சுக்குக்காப்பி கடைகளும், மாலையில் இறைச்சி கடைகள், டிபன் கடைகளும் ஏராளமாக செய ல்படுகின்றன. கடைகள் நடத்துவோரும், உண்போரும் கழிவுகளை குளத்தில் வீசி எறிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தெப்பக்குளத்தை மாசடைய செய்வோர் மீது அபராதம் வசூலிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குளத்தைச் சுற்றிலும் கடைகள் நடத்த மாநகராட்சி அனுமதிக்கக் கூடாது. தெப்பக்குளத்தின் அனைத்து நுழைவு வாயில்களையும் இரும்பு கதவுகளால் மூட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.