பதிவு செய்த நாள்
21
டிச
2015
12:12
கோத்தகிரி: எத்தையம்மன் திருவிழா இன்று துவங்குவதால், படுக மக்கள் வசிக்கும் கிராமங்கள், விழா கோலம் பூண்டுள்ளன. படுகர் மக்களின் குல தெய்வமான எத்தையம்மன் திருவிழா, இன்று துவங்குகிறது. எத்தையம்மன் கோவில் அமைந்துள்ள பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், பெப்பேன், சின்னக் குன்னுார் மற்றும் எப்பநாடு ஆகிய கிராமங்களில் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. இவ்விழா, இன்று கோத்தகிரி கேர்பெட்டா கிராமத்திலும், 23ல் பேரகணி மடிமனையிலும், 25ல் காத்துகுளி மடிமனையிலும், 26ல் ஒன்னதலை மடிமனையிலும் நடக்கிறது. விழாவில், அம்மனுக்கே உரித்தான கத்திகை என்ற அருள்வாக்கு, காணிக்கை செலுத்துதல், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முக்கிய திருவிழா நாளான, 27ல் மடிமனையில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மனை, வண்ணக்குடைகளின் கீழ், கிராமத்தில் உள்ள எத்தையம்மன் கோவிலுக்கு அழைத்து செல்கின்றனர். அங்குள்ள சுத்தகல் வளாகத்தில், அம்மனுக்கு காணிக்கை செலுத்தி, அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு கத்திகை நிகழ்ச்சியும்,கேளிகை என்ற நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.