பதிவு செய்த நாள்
05
ஆக
2011
05:08
ஆடி மாத வெள்ளிக் கிழமைகள் தனிச் சிறப்பு மிக்கவையாக சொல்லப்பட்டுள்ளன. இந்த நாட்களில் அம்மனுக்கு கூழ்வார்த்தும்; வேப்பிலை, மஞ்சள் அரைத்துப் பூசியும்; பாற்குடம், முளைப்பாரி எடுத்தும் வழிபடுவது சிறப்பான பலன்தரும் என்பது ஐதிகம். ஆண், பெண் இருபாலரும் தீமிதித்து வழிபடுவதும் உண்டு. ஆடி வெள்ளி நாட்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால், ஆரோக்கியம் சீராகும். பெண்கள் பலர் கூடி திருவிளக்கு பூஜை செய்வதும் சிறப்பானது. இந்த நாட்களில் கோயில்களிலும் அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரங்கள், பூஜைகள் செய்வர். இவற்றுள் தனிச் சிறப்பானது சாகம்பரி அலங்கார பூஜை. முழுக்க முழுக்க காய்கனிகளால் அம்மனை அலங்கரித்து நடத்தப்படுவதே இந்த பூஜை. இந்த அலங்காரத்தில் அம்மனை தரிசித்தால், ஆண்டு முழுதும் உணவுப் பஞ்சம் இருக்காது என்பது நிச்சயம். தருமை ஆதீனக் கோயில்களில் ஆடி வெள்ளிக் கிழமைகளில் நவசக்தி வழிபாடு நடைபெறும். சிவாச்சாரியார்கள் ஒன்பதுபேர், ஒன்பதுவித மலர்களால், நவசக்தியரையும் ஒரே சமயத்தில் அர்ச்சிப்பார்கள். இதுவே நவசக்தி அர்ச்சனை. இந்த பூஜையில் சர்வபூதமணி, மனோன்மணி, பலப்ரதமணி, பலவிகரணி, காலவிகாரணி, காளி, ரௌத்திரி, ஜேஷ்டை, வாமை ஆகிய ஒன்பது தேவியரையும் விசேஷப் பெயர்களான தீப்தை, சூட்சுமை, ருஜை, பத்ரை, விபூத்யை, விமலை, அமோகை, வியுக்தை, சர்வதா முக்யை என்ற திருநாமங்களால் அர்ச்சிப்பர்.