பிரளயகாலேஸ்வரர் கோவில் நடைபாதையில் பனிப்படராத அதிசயம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2015 05:12
பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு முன்பு உள்ள நடைபாதையில் மட்டும் பனிப் பொழிவு இல்லாததால், அதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
சிவன் கோவில்களில் உள்ள நந்தி பகவான் பெரும்பாலும் மூலவரை பார்த்தவாறு தான் இருக்கும். ஆனால், கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளகாலேஸ்வரர் கோவிலில் உள்ள நந்திபகவான் மட்டும் மூலவரை பார்க்காமல், கிழக்கு திசை நோக்கி வாயிலை பார்த்த நிலையில் உள்ளார். மேலும், கோவிலில் உள்ள மூலவரை நான்கு திசைகளிலும் பார்த்து வழிபடலாம். இதில், மூலவருக்கு முன் பகுதியில் மட்டுமன்றி, சுற்றி உள்ள மூன்று திசைகளிலும் பார்த்து வழிபட ஜன்னல் உள்ளது.
இந்த கோவிலில் தற்போது மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று பவுர்ணமி சிறப்பு பூஜை முடிந்த நிலையில், அர்த்த சாம பூஜையுடன் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், காலை கோவில் பணியாளர்கள், கோவிலை திறக்க வந்தபோது நந்தி பகவான் முன்பு உள்ள நடை பாதையில் மட்டும் பனிப் பொழிவு இல்லாமல் மற்ற இடங்களில் பனி படர்ந்து ஈரம் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து நடைபாதை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.