சிதம்பரம்: ஆருத்ரா மகா தரிசனத்தையொட்டி நந்தனார் சுவாமிகள் வீதி உலா சிதம்பரத்தில் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தையொட்டி நந்தனார் கல்விக் கழகம் மற்றும் சுவாமி சகஜானந்தா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில் ஓமக்குளம் சவுந்திரநாயகி சமேத சிவலோகநாதர் சுவாமி கோவிலில் நந்தனார் சுவாமிகள் திருவுருவச்சிலை வீதியுலா துவக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பொறுப்பு மடாதிபதி பழனிவேல் சுவாமிகள் தலைமை தாங்கினார். தொழிலதிபர் ராமநாதன் நந்தனார் வீதியுலாவை துவக்கி வைத்தார். நந்தனார் சுவாமி திருவுருவச்சிலை ஓமக்குளத்தில் இருந்து புறப்பாடு செய்து விழக்கட்டி பிள்ளையார் கோவில், சபாநாயகர் கோவில், நான்கு ரத வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நடராஜர் கோவில் முன்பு நந்தனார் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடைபெற்று நந்தனார் மடத்தை அடைந்தது. நிகழ்ச்சியில் நந்தனார் மட நிர்வாகிகள் டாக்டர் சங்கரன், ஜெயச்சந்திரன், இளங்கோவன், கலியமூர்த்தி, வினோபா, இளைய அன்பழகன், காவியச்செல்வன், குறிஞ்சிவளவன் பங்கேற்றனர்.