பதிவு செய்த நாள்
28
டிச
2015
04:12
யோகா, இந்தக் கலையை எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் கேள்விப்பட்டு இருப்பார்கள். ஆரோக்யமாக வாழவும் ஆயுளை நீட்டிக்கவும் உதவக்கூடிய இந்தப் பயிற்சி இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்குமே அவசியமான ஒன்று என்றே சொல்லலாம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, யோகாவை இறைவனை அடையும் மார்க்கமாக பயன்படுத்தி வெற்றிகண்டிருக்கிறார்கள். சித்தர்கள். மனதை ஒருநிலைப்படுத்தி யோகக்கலை மூலமும், ஞான மார்க்கங்களை முறைப்படி பின்பற்றி இறை அருளோடு காயசித்தி பெற்றவர்கள். சிவயோக சித்தர்கள்.
வாசி என்ற மூச்சினை அடக்கி, யோக சித்தியால் உடலில் உள்ள மூலாதாரம் நாபி. இதயம், இரைப்பையின் நடு, கழுத்து, தலை உச்சி என்ற ஆறு இடங்களில் மனதை நிலைநிறுத்தி, குண்டலினியை எழுப்பி மேலேறச்செய்து சித்தி பெற்றிருக்கின்றனர். அண்டசராசரங்களின் இயக்கத்திற்கும் ஒவ்வொரு தனி மனிதனின் இயக்கத்திற்கும் காரணமான சக்திக்குத்தான் குண்டலினி என்று பெயர். அந்த ஆற்றலைப் பேணிக்காக்க யோகா அவசியம். யோகா என்ற சொல் யுஜ் என்கிற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது. இதற்கு இணைத்தல் ஒட்டுதல், ஐக்கியம் சேருதல் என்றெல்லாம் அர்த்தம் உண்டு. இணைத்தல் என்றால் அவரவர்களை அவர்தம் உடலோடு மனதோடு ஆன்மாவோடு இணைத்தல் என்பன. ஜீவனில் இருக்கக்கூடிய அழிவற்ற நித்தியமான ஆன்மாவை, அதாவது ஜீவாத்மாவை அதன் மூலமான பரமாத்மாவோடு இணைத்தல்.
சிவபெருமானாகிய ஆதிசித்தன் பார்வதிதேவிக்கு செய்த யோக ஞான உபதேசங்களை பதஞ்சலி கேட்டறிந்து 196 சூத்திரங்களாக எழுதிவைத்தார். வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் சூத்திரங்களான, அந்த யோக சூத்திரங்களில் வெகுவாகக் கொண்டாடப்படுபவை அஷ்டாங்க யோகம் எனும் எட்டுவகையான வாழ்வியல் நடைமுறைத் தத்துவங்கள் ஆகும். இந்த அஷ்டாங்க யோகத்தின் அங்கங்கள் எளிதாக அறிந்துகொண்டு வெளிப்படையாகச் செய்யக்கூடிய சுயஒழுக்கம் ஆகிய உயிர்க்கொலை செய்யாமை, உண்மை பேசுதல், பிரம்மச்சரியம், லஞ்சம் வாங்காமை களவு செய்யாமை, போன்றவையாகிய பஞ்ச இயமத்தையும் உடல்தூய்மை, உச்சகட்ட மகிழ்ச்சி, தன்னிலை ஆய்வு தெய்வநிலை ஆய்வு ஆன்மிக விதிகள் கடைப்பிடித்தல் என்ற பஞ்ச நியமத்தையும் சொல்கிறது.
ஆசான் மூலம் அறிந்துகொள்ளும் விதமாக ஆசனம் என்ற உடல் இருக்கை நிலைகள், பிராணாயாமம் என்ற மூச்சுக்கலை, அந்தரங்க யோகம் எனும் அந்தரங்கா, உள்முக பயிற்சிகளாகிய பிரத்தியாகரா (புலன்களை உள்வாங்குதல்), தாரணா (என்ற கவன ஈர்ப்பு), தியானம் (ஒன்றில் நிலைத்தல்) சமாதி ( ஆதிக்கு சமமாகி நிற்கும் நிலை) ஆகியவற்றைப் பற்றி விரிவாகச் சொல்கிறது. அதுதவிர நோய்கள் அண்டாமல் தடுப்பவையும் வந்தால் அவற்றைத் தீர்த்து வைக்கும் திறன் கொண்டவையுமான ஆசனங்கள் கிரியைகள் மற்றும் முத்திரைகள் கொண்ட யோகா முறையான ஹடயோகம் சித்தத்தை அபிவிருத்தி செய்து அதை பிரபஞ்சத்தை குறித்து சிந்திக்கச் செய்யும் ஞான யோகம் பிரதிபலனை எதிர் பாராமல் பிறர்நலத்துக்கெனவாழும் கர்மயோகம் நமக்குள் உறையும் ஜீவாத்மாவான பரமாத்மாவை சரணடைந்து வழிபடும் நிலையைச் சொல்லும் பக்தி யோகம் ஆகியவற்றைப் பற்றியும் பதஞ்சலி யோக சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அனைத்து யோகங்களின் ரகசிய அர்த்தமாக இருப்பது உயிர்த் திரவமாகிய விந்து நாதத்தை பாதரசமாக்கி அதன் உற்பத்தித் தளமான மூளையோடு இணைப்பதுதான். யோகப்பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகள் இவற்றின் மூலம் முதுகுத்தண்டு நன்கு வளையும் தன்மை பெறுகிறது. முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில்தான் உடலின் மையப்பாகமான மூலாதார சுரப்பி உள்ளது. இது முக்கோண வடிவில் உள்ளது. இதன் கீழே விந்துவும் நாதமும் சேகரிக்கும் பைகள் உள்ளன. இந்த விந்துநாத திரவமே குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இந்த உயிர்த்திரவம் உடலிலே இருக்கும் வரைதான். உடலில் உயிர் நிலைத்து நிற்கும். ஒரு சாதாரண மரணமாக இருந்தாலும் உயிர்நீராகிய விந்துநாதம் வெளியேறினால்தான் உயிர் உடலிலிருந்து வெளியேறும். இதற்கு உதாரணமாக மின்கலத்தில் அமிலம் ஆற்றலைச் சேமித்து வைத்துள்ளதைச் சொல்லலாம். மின்கலத்தில் ஆசிட் குறையக் குறைய ஆற்றலும் குறைந்துவிடும். ஆசிட் வற்றிவிட்டால் மின்கலம் தன் முழு பலத்தையும் இழந்து விடும்.
ஆண், பெண் உடல்களில் விந்து நாதமாக உற்பத்தியாகி மூலாதாரத்தில் தேக்கமுறும் விந்துநாதம் திட, திரவ, வாயுவாக மூன்று நிலைகளிலும் இருக்கிறது. குண்டலினியை மூன்றரைச்சுற்று வளைந்து படுத்து தன் வாலை தானே கல்வியபடி படுத்திருக்கும் ஒரு பாம்பாக உருவகப்படுத்தியுள்ளவர்கள் சித்தர்கள். சுருண்டு படுத்திருப்பதால் முதுகெலும்பின் அடிப்பாக வாய் அடைப்பட்டுள்ளது. யோகாப் பயிற்சிகள் செய்வதன் ரகசியமே இந்த முதுகெலும்பின் அடைப்பட்ட வாயைத் திறப்பதுதான் இந்த வாய் திறக்கப்பட்டால் இந்தக் குண்டலினி சர்ப்பம் அதன் பிறப்பிடமான மூளையைச் சென்றடையும். குழந்தையாக இருக்கும்போது உயிர்த்திரவமானது மூளையில் இயங்குகிறது. சிறு குழந்தைகளின் உச்சந்தலையில் மென்மையான பகுதியும், அதில் இதயத்துடிப்பு போன்ற ஒரு துடிப்பும் இருப்பது இதனால்தான் மூளையின் கட்டுமானம் முழுமை பெற்ற பிறகு இந்த திரவம் நெற்றிக்கு நேரே இருக்கக்கூடிய நாளமில்லாச் சுரப்பிகளின் தலைமைச்சுரப்பியான பிட்யூட்டரி, ஆக்கினைச்சக்கரம்) வருகிறது. பின்பு முதுகெலும்பின் வழியே நடுநாளத்தின் மூலம் கீழிறங்கி தொண்டைப்பகுதியான விசுத்தி சக்கரத்திற்கு (தைராய்டு, பாரா தைராய்டு) வருகிறது.
அங்கிருந்து அனாகதச்சக்கரம் என்ற தைமஸ் பகுதியாகிய மார்புச் சக்கரத்திற்கும் அதைத் தொடர்ந்து முதுகெலும்பின் வழியாகவே அட்ரீனல் சுரப்பி என்ற மணிபூரக சக்கரமான தொப்புள், அதற்குப்பின் கீழிறங்கி சுவாதிட்டானம் என்ற பான்கிரியாசுக்கும் அங்கிருந்து புவியீர்ப்பு விசையால் கீழிறங்கி மூலாதாரம் என்கிற ப்ராஸ்டேட் சுரப்பிக்கும் வருகிறது. உயிர்த் திரவத்தை பாதரசம் போல் கெட்டிப் படுத்தவே யோகா மற்றும் பிராணாயாம பயிற்சிகள் செய்யப்படுகின்றன. இதனால்தான் உடல் வெப்பநிலையை அளக்க பாதரசமானிகள் பயன்படுத்தப்படுகின்றன. பிராணாயாமத்தின்போது கும்பகம் எனும் காற்றை உள்ளே நிறுத்தும் சமயத்தில் உடல் வெப்பம் அதிகரித்து விந்துவும் நாதமும் மேலேறுகின்றது. அணைக்கட்டுகளில் உண்டாக்கப்படுகிற மின்சாரம் டிரான்ஸ்பார்மர்கள் மூலமாக ஆங்காங்கே பிரித்து அனுப்பப்படுவது போல மூலாதாரம் உற்பத்தித் தலம் ஆகவும். சுவாதிட்டானம், மணிபூரகம் அனாகதம், விசுத்தி, ஆக்கினை, சகஸ்ராரம் போன்ற ஆதாரச் சக்கரங்கள் டிரான்ஸ்பார்மர்களாகவும் செயல்படுகின்றன.
இந்த சக்கரங்கள் மருத்துவ அறிவியலால் நாளமில்லாச் சுரப்பிகள் என்று வழங்கப்படுகின்றன. உயிர் நீரின் தன்மை நீர்த்து இருக்கும்போது கீழான எண்ணங்களும். உயிர்த்திரவங்கள் கெட்டிப்பட்டு இருக்கும்போது ஆன்மிக உயர் எண்ணங்களும் தோன்றும். பிராணாயாமம், உயர் எண்ணங்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. நாகப்பாம்பின் வடிவத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் குண்டலினி விழித்தெழுந்து சுழுமுனை நாடி மூலம் உடலின் ஒவ்வொரு யோக ஆதாரஸ்தானமாகிய மையங்களின் ஊடே சென்று உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் புத்துணர்வையும் அறிவையும் ஞானத்தையும் தரும். இந்தச் சுழுமுனையை அடக்கியாளும் திறமை பெற்றதாலேயே சித்தர்கள் எந்தச் செயலையும் செய்யும் வல்லமை படைத்தவராக விளங்கினர். சாதராண மனிதரிடத்தில் சுழுமுனையின் கீழ்ப்பகுதி அடைப்பட்டுக் கிடக்கிறது. அது செயல்படுவதில்லை. அவர்களுக்கு உடலில் இடகலை, பிங்கலை என்ற இரண்டு நரம்புகள் மட்டுமே செயல்படுகின்றன. சுழுமுனை நரம்பு வழியாக எந்த வேலையும் நடைபெறுவதில்லை. சுழுமுனையைத் திறந்து அதன் வழியாக இயக்கங்கள் நடைபெறும் வித்தையை அவன் அறியும்போது யோகியாகிறான்.
குண்டலினியை ஹடயோகிகளால் பிராணாயாமம், ஆசனங்கள் முத்திரைகள் இவற்றால் எழுப்ப முடியும் பிராணா என்றால் காற்று; அயாமா என்றால் கட்டுப்படுத்துதல், அஷ்டாங்க யோகத்தில் பிராணாயாமத்தில் இருந்துதான் யோகத்தை சித்தி செய்ய முடியும் என்பதை சித்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். சுவாசம் எனப்படும் உள்ளிழுக்கும் மூச்சையும் பிரச்வாஸம் எனும் வெளிவிடும் மூச்சையும் கட்டுப்படுத்துவதுதான் பிராணாயாமம் என்கிறது பதஞ்சலி சூத்திரம். பிராணன் என்பது உயிர்க்காற்று தசவாயுக்களில் பிராணன், அபானன், சமானன், உதானன் வியானன் எனும் பஞ்ச பிராணன்களே முக்கியமானவை. இதில் முக்கியமானது பிராணனே. பிராண வாயுவே தனது செய்கையினால் பல வாயுக்களாக பரிணாமம் கொள்கிறது. இந்த பிராணவாயுவை இயங்காமல் அதன் பிறப்பிடத்திலேயே சலனமின்றி இயக்கமின்றி நிறுத்தவேண்டும். இதுவே பிராணாயாமம். பிராணனின் இயக்கம் உள்ளவரை புலன்கள் ஏதாவது ஒன்றைப் பற்றி காரியத்தில் ஈடுபட்டு மனம் அலைபாயும் இந்த அலைகளை நிலைப்படுத்துவதே பிராணாயாமம்.
பிராணன் நிலைத்தால்தான் மனம் நிலைக்கும் மனித உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளின் ரகசியத்திற்கும், பிராணாயாம பயிற்சியே ஆதாரம் ஆகும். இதனைச் செய்வதன் மூலம் அதிகமாக மூச்சுக்காற்று உள்ளே இழுக்கப்படுகிறது. நமது உடல் தனக்குத் தேவையான ஜீவ வாயுவான பிராணவாயுவை தனக்கு எடுத்துக்கொண்டு வேண்டாத கெட்ட வாயுவான கார்பன்டை ஆக்சைடை வெளிவிடுகிறது. மூச்சை உள்ளே இழுப்பதும், வெளிவிடுவதும் இரண்டு துவாரங்களிலும் மாறி மாறி நிகழ்கிறது. வலது பக்கத் துளை வழியாக வெளியேறும் மூச்சுக்காற்றை சூரிய கலை என்றும் இடது பக்கத் துளை வழியே வெளியேறும் மூச்சுகாற்றை சந்திரக்கலை என்றும் கூறுவர். சூரியகலையில் செல்லக்கூடிய மூச்சினை சந்திரகலையில் மாற்றுவதற்குரிய அற்புதமான பயிற்சியே பிராணாயாமம் என்று கூறுவர். பிராணயாமம் மூன்று நிலைகளாக சொல்லப்படுகிறது. சுவாசத்தை உள்ளிழுப்பது பூரஹம், சுவாசத்தை வெளியே விடுவது ரேசகம், சுவாசத்தை நிறுத்தி வைத்தல் கும்பகம் பிணி இன்றி நீண்டநாள் வாழ சித்தர்கள் கண்டறிந்த வழிமுறைகளுள் பிராணாயாமம் ஓர் அற்புத யோகப்பயிற்சியாகும்.