பதிவு செய்த நாள்
29
டிச
2015
11:12
பந்தலுார்: மிலாது நபி ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு, அய்யப்ப பக்தர்கள் பாயசம் வழங்கி, மத ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.நீலகிரி மாவட்டம், பந்தலுார் பஜாரில் உள்ள பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி சார்பில், மிலாது நபி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் பள்ளிவாசலில் துவங்கி, பஜார் பகுதிக்கு வந்தது. அப்போது, அய்யப்பன் கோவில் அருகே, கோவில் கமிட்டி மற்றும் அய்யப்ப பக்தர்கள் சார்பில், ஊர்வலத்தில் வந்த இஸ்லாமிய மக்களுக்கு பாயசம் வழங்கப்பட்டது. பதிலுக்கு, ஊர்வலத்தில் வந்தவர்கள் இனிப்பு வழங்கினர்.அப்போது, ஜமாத் கமிட்டி நிர்வாகி அனஸ் பேசுகையில், நாம் மதத்தால் வேறுபட்டாலும், அதை கடந்து, அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது, என்றார்.குருசாமி அய்யப்பன் பேசுகையில், சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மதம், ஜாதியை கடந்து, மனிதநேயம் மட்டுமே உயர்ந்தது என்பதை நிரூபித்தது. நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அன்புடனும், நட்புடனும் இருந்தால், சமூகத்தில் பல நன்மைகள் ஏற்படும், என்றார்.