பதிவு செய்த நாள்
01
ஜன
2016
10:01
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த திருப்படி திருவிழாவில், நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர், பக்தி பாடல்கள் பாடி மூலவரை வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, காலை 8:30 மணிக்கு, சரவணப்பொய்கை அருகில் உள்ள மலையடிவாரத்தில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர், முதல் பஜனை குழுவினரை வரவேற்று, படித் திருவிழாவை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில், 365 படிகளிலும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர், ஒவ்வொரு படியிலும் பக்தி பாடல்கள் பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நள்ளிரவு 12:01 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.