சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் முதல்வர் தலைமையில் ஆலோசனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2016 12:01
சபரிமலை:சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சபரிமலையில் மகர விளக்கு சீசனுக்காக கடந்த 30ம் தேதி மாலையில் நடை திறந்தது. 31 அதிகாலை முதல் நெய்யபிஷேகம் நடைபெற்று வருகிறது. நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. எட்டு முதல் பத்து மணி நேரம் வரை கியூவில் நின்றுதான் பக்தர்கள் தரிசனம் நடத்துகின்றனர். சீசன் நாட்களிலும், மகரவிளக்கு நாளிலும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் முதல்வர் உம்மன்சாண்டி கூறியதாவது: சபரிமலையில் தற்போது பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் பக்தர்களுக்கான வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படும். மலை வழி பாதைகளில் ரோடு அமைக்கப்படும். இந்த ஆண்டு நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது. 21 இடங்களில் புதிதாக மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. 60 ஆம்புலன்சுகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.