காரைக்கால் : காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி உற்சவம் நடந்தது. சிவபெருமான் கலப்பையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காரைக்கால் தலத்தெரு பழங்காலத்தில் திருத்தெளிச்சேரி என வழங்கப்பட்டு வந்தது. இவ்வூர் மழையின்றி வரண்டு கிடந்ததால், சிவபெருமான் உழவன் வேடத்தில் வந்து நிலத்தை உழுது விதை தெளித்து கரையேறினார். அப்போது மழை பெய்ய துவங்கியது. விவசாயம் பெருகி வறுமை நீங்கி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் என்ற கதை வழங்கப்பட்டு வருகிறது. அந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் காரைக்கால் தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விதை தெளி ஊற்சவம் நடக்கிறது.இக்கோவிலில் விதை தெளி உற்சவம் நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9 மணிக்கு ஸ்ரீ ருத்ர கலச பூஜைகள் மற்றும் ருத்ர பாராயணத்துடன் ஹோமம் ஆரம்பமானது. காலை 11.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாராதனையும், ருத்ர கலச அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.நேற்று காலை சிவலோகநாதர் விஸ்வரூப தரிசனம், விதை தெளி உற்சவம் ஆகியவை நடந்தது. சிவபெருமான் உழவு மேற்கொள்ள கலப்பையை ஏந்தி சிவகாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கோவிலின் எதிரே உள்ள நிலத்தில் விதை தெளித்தனர்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.