அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!
விளக்கம்: இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும். எப்படி அவனது பார்வையை நம் மீது திருப்புவது. மிக எளிதாக ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா! அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய பதங்களை... அவற்றைச் சொன்னாலே போதுமே! அவனது பார்வை பட்டுவிடும்.