ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கும்பாபிஷேகம் சிறப்பு பகுதி: காதில் விழட்டும் நல்ல மந்திரங்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2016 12:01
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மகாகும்பாபிஷேகம் ஜன.20ல் நடப்பதை ஒட்டி இந்த சிறப்பு பகுதி வெளியாகிறது.
நான் பெரிய பெரிய பாவமெல்லாம் செய்திருக்கிறேன். கடவுளை நாடி நான் சென்றால், அவர் என்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டார். நமக்கு கதி நரகம் தான். வேறு என்ன செய்ய! அன்று செய்த வினை இன்று என்னை நோக்கி திரும்பி வருகிறது. எனக்கேது விமோசனம்’ என்று நினைப்பவர்கள் எத்தனையோ பேர்! ஆனால் இவர்களுக்கும் விமோசனம் உண்டு. எப்படி?ராமன் காட்டுக்குப் போய் விட்டான். பரதன் கலங்கிப் போய் இருக்கிறான். ’மகாபாவியான என்னால் தானே அண்ணன் காட்டுக்குப் போனார். நான் தானே அவரிடமிருந்து ஆட்சியை பறிக்க திட்டமிட்டதாக மக்கள் நினைப்பார்கள்! இந்த களங்கத்தை போக்க வேண்டுமானால் அண்ணனை திரும்ப அழைத்து வருவோம். அது மட்டுமல்ல! தந்தை தசரதர் காலமான செய்தியையும் அவருக்கு தெரிவித்து மூத்தவர் என்ற முறையிலே இறுதிச்சடங்குகளை செய்யவாவது அவரை அழைத்து வருவோம்’ என்று புறப்பட்டான். ராமன் அண்ணாவிடம் சென்றால், ’இந்த பாவியால் தானே நமக்கு இந்த நிலை வந்தது?’ என்ற எண்ணத்தில் நம்மை ஏற்றுக்கொள்வாரா என்ற பயம் அவனுக்கு வந்து விட்டது. எனவே துணைக்கு மகரிஷிகளை அழைத்துச் சென்றான். இதே போல விபீஷணன் ராமனை சரணடைய வரும் போது ராமனுக்கு பிடித்தமான வானரர்களை உடன் அழைத்துக் கொண்டு வந்தான்.அதே போல் தான் இன்று நம் நிலையும் இருக்கிறது. நாமும் ஏகப்பட்ட பாவங்களுடன் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிவனோ நெற்றி கண்ணை உடையவர். அவரருகில் சென்றால் என்னாகுமோ என்ற பயம் இருக்கிறது. எனவே நாம் ராமன் மூலமாக அவரை அடைகிறோம். ராமேஸ்வரத்தில் ’நமசிவாய’ சப்தமும் கேட்கிறது, ’ராம’ நாமமும் ஒலிக்கிறது. இந்த இரு மந்திரங்களும் நம் காதில் விழுந்தாலே பாவங்கள் பறந்தோடும். நாமும் ராமேஸ்வரம் சென்று கும்பாபிஷேகத்தை தரிசிப்போம். பாவங்களை தொலைத்து புதுவாழ்வு துவங்குவோம்.