திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வரும் 14ல் 2007 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2011 11:08
திருவட்டார் : திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வரும் 14ம் தேதி 2007 திருவிளக்கு பூஜை நடக்கிறது. தென்னிந்தியாவின் வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரளி, கோதை ஆறுகளின் கரையில் சிறப்புற அமைந்துள்ளது. இக்கோயில் நாட்டின் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், 13 மலைநாட்டு திருப்பதிகளில் சிறப்பு பெற்றும் விளங்குகிறது. பல லட்சம் கோடி பொக்கிஷ குவியல்களை கொண்டுள்ள திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலும், இக்கோலும் தோற்றத்திலும், அமைப்பிலும் ஒன்றுபோல் உள்ளது. இவ்விரு திருத்தலங்களிலும் இறைவன் பள்ளிகொண்ட கோலத்தில் அனந்தசயனராக காட்சி தருகிறார்.
திருவட்டார் கோயில் வெளிப்பிரகாரத்தை சுற்றி தூண்களில் செதுக்கி வைத்துள்ள 224 தீபலட்சுமிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான ஆடைகளும், அணிகலன்களும் அணிந்து விதவிதமான தலை அலங்காரங்களுடன் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் காணப்படும் கற்சிலைகள் தமிழகத்தின் கலை திறனையும், மர வேலைப்பாடுகள் கேரள மாநிலத்தின் கலைத்திறனையும் நினைவூட்டுவதாக அமைகிறது. இவ்வாறாக இயற்கை அன்னையின் அருளால் கலைத்திறனையும், மர வேலைப்பாடுகளையும் உள்ளடக்கிய இந்த கோயிலில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா சார்பில் வரும் 14ம் தேதி 2007 திருவிளக்கு பூஜை நடக்கிறது.