பதிவு செய்த நாள்
14
ஜன
2016
12:01
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த, சீராப்பள்ளியில் பழநி பாத யாத்திரை குழுவினர் தங்களது, 40ம் ஆண்டு பயணத்தை தொடங்குகின்றனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளியில் இருந்து ஆண்டுதோறும் தை, 1ம் தேதி பழநி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையை தொடங்குவர். சீராப்பள்ளியில், பாலமுருகன் கோவில் பழநி பாதயாத்திரை குழு, அருள் முருகன் யாத்திரை குழு, சிவன் கோவில் குழுவினர் என, மூன்று பாதயாத்திரை குழுக்கள் உள்ளன. நாமகிரிப்பேட்டை, வெள்ளக்கல்பட்டி, தொப்பப்பட்டி, ஒடுவன்குறிச்சி, காக்காவேரி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொள்கின்றனர். சீராப்பள்ளியில் குருசாமி ராஜமாணிக்கம், சந்திரன் தலைமையில், 40ம் ஆண்டாக யாத்திரை செல்ல உள்ளனர். இதுகுறித்து, 26ம் ஆண்டு பாதயாத்திரை செல்லவுள்ள பக்தர் ஆவுச்சி மணி கூறியதாவது: எங்கள் பயணத்தை, ஐந்து நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். தை மாதம், 6ம் தேதி பழநியில் தண்டாயுதபாணி முருகனுக்கு குழு சார்பில் சிறப்பு அபிஷேகம் நடக்கும். அதேபோல், வெள்ளக்கல்பட்டியில் உள்ள, முருகன் பாதயாத்திரை குழுவிலும், 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் நாளை யாத்திரை செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.