பதிவு செய்த நாள்
12
ஆக
2011
12:08
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல உற்சவத்தையொட்டி, ஆக.,30 ல் "நரியை பரியாக்கும் லீலை நடக்கிறது. இதில் அனுமதியின்றி நரியை உயிருடன் கொண்டுவந்தால், சம்பந்தப்பட்டவரை கைது செய்வோம் என வனத்துறை எச்சரித்துள்ளது. இதனால், நரியை கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் இவ்விழாவிற்கு அனுப்பானடியை சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,ராமசுப்பிரமணியன், நரியை உயிருடன் கொண்டு செல்வார். அவரது மூதாதையர் காலத்திலிருந்து இப்பணியை மேற்கொள்கின்றனர். உசிலம்பட்டியை சேர்ந்த நேதாஜி பாம்புகள் அறக்கட்டளை நிர்வாகி ரமேஷ். இவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், இக்கோயில் விழாவிற்கு நரியை உயிருடன் கொண்டுவர அனுமதி பெறப்பட்டுள்ளதா? என வனத்துறையிடம் கோரினார். அனுமதி பெறவில்லை என வனத்துறை பதிலளித்தது. கோயில் நிர்வாகம், எங்களுக்கு அதில் சம்பந்தமில்லை. ராமசுப்பிரமணியம் தான் பொறுப்பு என வனத்துறைக்கு தெரிவித்தது. மாவட்ட வன அலுவலர் ராகேஷ்குமார் ஜெகனியா, அனுமதியின்றி நரியை கொண்டு வந்தால் கைது செய்வோம் என எச்சரித்துள்ளார். இதை இன்று வனத்துறை அதிகாரிகள் கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்க உள்ளனர். ராமசுப்பிரமணியன்,""வனத்துறை அனுமதி பெற்று, முறைப்படி லீலையை நடத்துவோம். தடுத்தால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம், என்றார்.கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன்,""பாரம்பரியமாக நடக்கும் இவ்விழா தொடர்ந்து நடக்க வனத்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம், என்றார்.