பதிவு செய்த நாள்
19
ஜன
2016
12:01
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜன.,20) காலை 9.45 மணிக்கு நடக்க உள்ளது. இதையொட்டி ஜன.,13ல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. நேற்று மூன்றாம்கால பூஜைகள் நடந்தன. இன்று 4ம் கால யாகசாலை பூஜை நடக்க உள்ளது.
ஏற்பாடுகள் தீவிரம்: கும்பாபிஷேகத்தையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில், நகரிலிருந்து 20 கி.மீ., சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு பஸ்வசதி செய்யப்பட்டுள்ளன. மேலும் திருப்பணிக்குழு தலைவர் வேலுச்சாமி, நிர்வாகிகள் கந்தசாமி மற்றும் பலரது சார்பில் கும்பாபிஷேகத்தின்போது 70 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்காக புனித மரியன்னைப் பள்ளி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் மற்றும் பெண் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாதுகாப்புப் பணியில் அதிகளவில் பெண் போலீசார் ஈடுபட உள்ளனர்.
புனிதநீர் தெளிக்க ஏற்பாடு: கும்பாபிஷேகத்தின்போது கோயிலைச் சுற்றி பக்தர்கள் கூடும் 15 இடங்களில் ‘நவீன தெளிப்பான்’ (ஸ்பிரிங்லர்) மூலம் புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான ஆய்வுப் பணியில் மாநகராட்சி மேயர் மருதராஜ், ஆணையாளர் மனோகர், நகர்நல அலுவலர் அனிதா, நகரமைப்பு கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.