பதிவு செய்த நாள்
21
ஜன
2016
12:01
திருவள்ளூர் : திருவள்ளூர், தேவி மீனாட்சி நகரில் உள்ள, விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. திருவள்ளூர், தேவி மீனாட்சி நகரில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, 32 அடி உயரம், 16 அடி அகலத்தில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி சிலை, 2004ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஆறு கால பூஜை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், கர்ப்பகிரஹம், விமானம், மகா மண்டபம், திருமடப்பள்ளி, ராஜகோபுரம் ஆகிய கட்டுமான பணிகள் செய்து முடிக்கப்பட்டன.ராஜ கோபுரத்துடன், 108 அடி உயரத்தில் விமானமும், அதன் மேல் கம்பீரமாக 15 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டு உள்ளன. பணி நிறைவடைந்ததையடுத்து, மகா சம்ப்ரோக்ஷண விழா, கடந்த 18ம் தேதி துவங்கியது.முதல் நாளன்று, பகவத் பிரார்த்தனையுடன் பாலிகா பிரதிஷ்டை, அக்னி பிரதிஷ்டை, பஞ்ச ஸூக்த ஹோமங்கள் நடைபெற்றன.நேற்று, காலை 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.பட்டாச்சாரியார்கள் சம்ப்ரோக்ஷண விழாவை நடத்தி, கலசத்திற்கு புனித நீர் தெளித்தனர். மாலை 5:00 மணிக்கு, பஞ்சமுக ஸஹஸ்ர நாமார்ச்சனை, புஷ்ப வ்ருஷ்டி, மங்கள ஹாரத்தி நடந்தது.இதில், திருவள்ளூர், பூங்கா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.