பதிவு செய்த நாள்
22
ஜன
2016
11:01
திருப்பூர்: பழநிக்கு பாத யாத்திரை செல்லும், 50 ஆயிரம் பக்தர்களுக்கு, ஸ்ரீபழனியப்பா அறக்கட்டளை சார்பில், தாராபுரத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. திருப்பூர் ஸ்ரீபழனியப்பா அன்னதான அறக்கட்டளை சார்பில், பழநி தைப்பூச திருவிழாவுக்கு, பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, தாராபுரம் கோகுல் திருமண மண்டபத்தில், 16 ஆண்டுகளாக அன்னதானம் வழங்கப்படுகிறது. நேற்று முன்தினம், ஸ்ரீசத்ய சாய் பஜனையுடன், இரவு அன்னதானம் துவங்கியது. நேற்று காலை, கணபதி ஹோமம், முருகனுக்கு திரிசதை அர்ச்சனை நடைபெற்றது. மேலும், தாராபுரம் - திருப்பூர் ரோடு, ஊதியூர் ரோடு, பழநி ரோடு, அலங்கியம் ரோடு, என, பக்தர்கள் நடந்து செல்லும் ரோடுகளில், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம், நேரடியாக காலை டிபன் மற்றும் மதியம் தயிர், தக்காளி மற்றும் சாப்பாடு, சாம்பார், குடிநீர் பாக்கெட், பிஸ்கட் உள்ளிட்டவை, தன்னார்வலர்களால் வழங்கப்பட்டது. மண்டபத்தில், காலை டிபன்; சாப்பாடு, சாம்பார், ரசம், தயிர், இரண்டு பொரியல், பாயாசம் ஆகியவற்றுடன், மதிய உணவு பரிமாறப்பட்டது.
டாக்டர் விபில் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், பக்தர்களுக்கு சிகிச்சை அளித்து, மருந்து வழங்கினர். கால் மற்றும் உடல் வலி தீர்க்கும் வகையில், ஆயுர்வேத எண்ணெய் வழங்கப்பட்டது. பெண்கள், ஆண்கள் என, தனித் தனியாக ஓய்வு எடுக்கும் வசதி, குளியல், கழிப்பிட வசதிகளும் மண்டபத்தில் செய்யப்பட்டுள்ளன. பக்தி இன்னிசை, காவடியாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, மதியம், இரவு; நாளை காலை உணவு என, மூன்று நாளில், 50 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க திட்டமிட்டுள்ளதாக, அன்னதான குழுவினர் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிறுவனர் வெள்ளியங்கிரி, திருப்பூர் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதிகள் மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம், பொருளாளர் முத்துக்குமார், ஆசிரியர் ஆறுமுகம் <உள்ளிட்டோர் பங்கேற்றனர்.