பதிவு செய்த நாள்
23
ஜன
2016
03:01
எண்ண மலர்களை ஒருமுகப்படுத்தி,
வண்ண மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட, வாழ்வில் வளம் பெறலாம். வரம்
பெறலாம்; நம் மனதை ஆண்டவனிடம் அர்ச்சனை மூலம் அர்ப்பணம் செய்ய உதவும் நல்
தூதர்கள் நறுமண மலர்கள். தாமரை மலர் இதயத்தை வலுப்படுத்தும். விஷ்ணு, மகா
லட்சுமிக்கு உகந்த சிவப்பு தாமரை திறமைகளைத் தட்டியெழுப்பும். வெள்ளை
எருக்கம் பூவால் விநாயகரை வழிபட பயம் நீக்கி, கஷ்மான விஷயங்களையும்
எளிதாக்கித் தருவார் பிள்ளையார். இம்மலரை தைரியம் என்றழைக்கின்றனர்.
பிள்ளைகள் பரீட்சை நேரத்தில் இம்மலரை விநாயகரின் பாதத்திலிட்டு வழிபட
தைரியம் கிடைக்கும். முருகனுக்கும் அம்பிகைக்கும் உரிய பூ செவ்வரளி,
இப்பூவைக் கொண்டு வழிபட துணிவும், தைரியமும் கிடைக்கும்.
சிவனுக்கு
உபயோகப்படுத்தும் நாகலிங்கப்பூவின் மஞ்சள் நிறம் மனத்தெளிவு அளித்து
பொறுமையை வளர்க்கும். நம்பிக்கையை உண்டுபண்ணும். திருமகளை இம்மலர் கொண்டு
வணங்கினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். ஆன்மாவை ஈசனுடன்
ஐக்கியப்படுத்துவது மல்லிகை மலர், பூஜையில் நம்மை லயிக்கச் செய்வது
மல்லிகையின் சிறப்பு. மல்லிகை மலர் அனைத்து தெய்வங்களுக்குமே உகந்தது.
சரஸ்வதி, தட்சிணாமூர்த்திக்கு வெண்தாமரை மலர்களை சமர்ப்பிப்பதால் அறிவு
தெளிவுபடும்; ஞானம் வசப்படும். நவக்கிரகங்களில் குரு பகவானுக்குரியது
முல்லைப்பூ, பேரின்ப வாழ்வு கிடைக்கும் முல்லைபூ அர்ச்சனையால்.
சமஸ்கிருதத்தில் செம்பருத்தியை ஜபா என்றழைப்பர். செம்பருத்தி பூ கொண்டு
அர்ச்சிப்பதால் புற அழகு. அக அழகு இவ்விரண்டும் மிளிரும்.
மார்கழியில்
வாசலில் குருபகவானுக்கு உகந்த ஸ்ரீம் கோலத்தைப் போட்டு அதன் மத்தியில்
பசுஞ்சாணத்தில் பூசணி பூ சொருகுவதால் சகல சம்பத்தும் அந்த வீட்டில்
நிறைகிறது. இறையாற்றலை சேகரித்து இல்லத்துக்கு வளம் சேர்க்கும் இம்மலரை
அபரிமிதம் என்றழைக்கின்றனர். வெள்ளை, ஊதா, நீலம் என பல வண்ணங்களில்
கிடைக்கும் சங்கு புஷ்பம் கொண்டு இறைவனை அர்ச்சிப்பதால் வாழ்வில் வளம்
கிடைக்கும். கருங்குவளை, செங்குவளை என பல வண்ணங்களில் ஒரு மலரினம், லில்லி
என்பது இதன் ஆங்கிலப்பெயர். பூஜைக்கு இம்மலர்களை உபயோகித்து அர்ச்சிக்க,
வாழ்வில் அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். ஸ்ரீ அரவிந்த அன்னைக்கு
மிகவும் உரிய மலர்கள் இவை.
உடலில் உண்டாகும் நோய்களுக்கு மனதில்
எழும் உணர்வுகளும் ஒரு காரணமாகும். மன உணர்வுகளை சீர்படுத்துவதில்
மலர்களின் பங்கு சிறப்பானது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். கோயிலில்
செய்யும் மலர் வழிபாட்டை நோக்கும்போது மலர்மாலையின் நிறம் நமது மனதில்
பதிந்து, நம் உடலில் உள்ள அதற்கான சக்கரத்தை சென்றடைந்து நமக்கு ஆரோக்கியம்
தரும். இதுவே கலர் எனர்ஜி தெரபி எனப்படுகிறது. நம் பிரார்த்தனைகளை
இறைவனிடம் சமர்பிக்கும் மலர்கள் நம் ஆரோக்கியத்துக்கான நல்லெண்ண
தூதர்களாகவும் இருப்பது நல்ல விஷயம்தானே.