திருச்செந்தூர் முருகன் தைப்பூச திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2016 10:01
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழா நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். திருச்செந்தூர் முருகன் கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்தனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 க்கு விஸ்வரூப தீபாரதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. மற்றகால வேளை பூஜைகள் தொடர்ந்து நடந்தது. காலை 7 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடினர். பக்தர்கள் காவடி, பால்குடம், அலகுகுத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்தனர். காலை 10 மணிக்கு <உச்சிக்கால அபிஷேகம், பகல் 12 மணிக்கு தீபாரதனை நடந்தது. பின் அலைவாய் உகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். உபயதாரர்கள் தரப்பில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. சுவாமியும், அம்பாளும் மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு மாலை காட்சியளித்தனர். பின் சுவாமி கோயில் வந்து சேர்ந்தார். இதில் லட்சணக்கான பக்தர்கள் முருகனை வழிபட்டனர்.
"கந்தவேல் முருகனுக்கு அரோகராகோஷம் விண்ணை பிளந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். தென்மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டன. போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.