பதிவு செய்த நாள்
25
ஜன
2016
12:01
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதியை, பங்காரு அடிகளார் நேற்று ஏற்றி வைத்தார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் தைப்பூச விழாவையொட்டி, இருமுடி விழா நடைபெறும். இந்த ஆண்டு, கடந்த நவ., 30ம் தேதி துவங்கிய இருமுடி விழா, 23ம் தேதி நிறைவடைந்தது. அதை தொடர்ந்து, தைப்பூச ஜோதி பெருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. காலை 3:30 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வேள்வி பூஜையும் நடைபெற்றன. அதை தொடர்ந்து, நேற்று மாலை 4:35 மணிக்கு, மூல விளக்கை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார். தைசப்பூச ஜோதி ஊர்வலத்தை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மாலை 6:30 மணிக்கு, தைப்பூச ஜோதியை பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார். ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன், தமிழ்நாடு தேர்வணைய தலைவர் அருள்மொழி, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி தணிகாசலம், தமிழக பா.ஜ., துணை தலைவர் வானதி சீனிவாசன் உட்பட, பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, மேல் மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர். காவல் கண்காணிப்பாளர் முத்தரசி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.