பதிவு செய்த நாள்
25
ஜன
2016
12:01
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, முருகன் கோவில்களில் நடந்த தைப்பூசத் தேர்திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் அடுத்த, மோகனூரில் காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கடந்த, 16ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தைபூசத்திருவிழா துவங்கியது. நேற்று, காலை, 10.30 மணிக்கு, சுவாமி திருத்தேரில் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, சுவாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அதை தொடர்ந்து இரவு, 8 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதேபோல், வையப்பமலை பாலசுப்ரமணியம் சுவாமி கோவில், நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவில், சேந்தமங்கலம் அடுத்த தத்தகிரி முருகன் கோவில், ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில், ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் பாலசுப்ரமணியர், தண்டாயுதபாணி சுவாமி கோவில், ராசிபுரம் வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கத்தின் சார்பில், வள்ளலார் கோவில், ப.வேலூர் அடுத்த கபிலர்மலை பாலசுப்ரமணியர் சுவாமி கோவில், குமாரபாளையம் வட்டமலை முருகன் கோவில் என, பெரும்பாலான முருகன் கோவில்களில் விழா கோலாகலமாக நடந்தது.
* நாமகிரிப்பேட்டை அடுத்த, தொ.ஜேடர்பாளையத்தில் உள்ள உள்ள முருகன் கோவிலில், தைப்பூசத் திருவிழா, தேரோட்டத்துடன் நடந்தது. முருகனுக்கு சிறப்பு அபி?ஷகம் ஆராதனை நடந்தது. மாலையில் தேரில் முருகன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பேளுக்குறிச்சி அடுத்த, பழனியப்பர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.