பதிவு செய்த நாள்
25
ஜன
2016
05:01
ஒவ்வொரு மாதப் பவுர்ணமியும் ஏதாவதொரு விதத்தில் பெருமையுடன் திகழ்கிறது. அந்தவகையில் ஆடிப் பவுர்ணமியில் நடந்த நிகழ்வுகளில், திருச்சி உறையூரிலுள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் உதங்கமுனிவர் கண்ட அற்புதமான தரிசனம் வெகுவாகப் போற்றப்படுகிறது. முற்காலச் சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்தது உறையூர். இத்தலத்தை கோழியூர் என்றும் சொல்வர். உறையூரில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் அருள்புரியும் இறைவனை நேரில் தரிசிக்க உதங்க முனிவர் தவம்மேற்கொண்டார். அதுவும், இறைவனின் வண்ணத் தோற்றங்களைக் காண அவர் மேற்கொண்ட கடுந்தவத்தினைப் போற்றிய இறைவன், முனிவரின் விருப்பப்படி காட்சிகொடுத்தருளினார். அதனால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்று போற்றப்பட்டார்.
முனிவருக்கு பஞ்ச (ஐந்து) வண்ணங்களில் சிவபெருமான் காட்சிகொடுத்த நன்னாள் ஓர் ஆடிப் பவுர்ணமி என்று புராணம் கூறுகிறது. அன்று முனிவருக்கு காட்சிகொடுத்ததுபோல் இன்றும் பஞ்சவர்ணேஸ்வரர் லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சிதரும் அற்புதத்தைக் காணலாம். சூரிய உதயத்திலிருந்து காலை 8.24 மணி வரை இறைவன் தாமரை வண்ணமாகத் திகழ்கிறார். இந்த நேரத்தில் நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்டால் மக்கட்செல்வம் இல்லையே என்று கவலைப்படும் பெண்களின் வேதனை மாறும் அழகான குழந்தைச் செல்வம் கிட்டும் அதற்குப்பின்.
காலை 8.25 மணி முதல் 10.57 மணிவரை பார்வதி மணாளனான இறைவன் சிவப்பு நிறத்தில் காட்சிதருவார். திருமணவயதடைந்தவர்களும் திருமணத்தடைகள் உள்ளவர்களும் இந்த வேளையில் மணமிக்க மலர்மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபட்டால், அவர்கள் விரும்பிய இடத்தில் திருமணம் விரைவில் நடைபெறும். காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரை, கயிலையில் அரசாட்சி செய்துகொண்டிருக்கும் பரமனான சிவபெருமான் தங்க வண்ணத்தில் பிரகாசிக்கிறார். அப்போது நெய்யபிஷேகம் செய்து, பின்னர் வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக, ஆராதனைகளைக் கண்டால் செல்வ வளம் பெருகும்; செய்யும் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.
நண்பகல் 1.16 மணி முதல் பிற்பகல் 3.38 மணிவரை, உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் சரிசமமாக இடம்கொடுத்த இறைவன் மரகதப் பச்சை நிறத்தில் காட்சிதருகிறார். அந்த வேளையில் பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கல்வியில் முன்னேற்றம் காணலாம். உயர்கல்வியில் முதலிடம் கிட்டுவதுடன். எதையும் விரைவில் புரிந்துகொண்டு, மனதில் நிறுத்திக்கொள்ளும் திறன் கிட்டும்; மனம் ஒருநிலைப்படும்.
பிற்பகல் 3.39 மணி முதல் மாலை 6.00 மணி வரை, உலக மக்களுக்கெல்லாம் படியளக்கும் இறைவன்; தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வண்ணத்தை இன்னதென்று விளக்கிச் சொல்லமுடியாதபடி காட்சி தருவார். அந்தவேளையில் தரிசிக்கும் பக்தர்களின் மனதில் என்ன வண்ணம் தோன்றுகிறதோ, அதேபோல் காட்சிகொடுப்பார் வினாடிக்கு வினாடி பல வண்ணங்களில் தரிசனம் தரும் அற்புதமான நேரம், இந்த வேளையில் இறைவனை (பஞ்சவர்ணேஸ்வரர் லிங்கம்) தரிசிக்க, நம் எண்ணங்கள் நிறைவேறும். மேலும் பூர்வஜென்ம பாவ தோஷங்கள் மற்றும் பித்ரு தோஷங்கள் நீங்கும் எனப்படுகிறது. எனவே, ஆடிப்பவுர்ணமியில் இறைவனின் வண்ண தரிசனம் கண்டால் நம் எண்ணங்கள் வேண்டுதல்கள், நிறைவேறும் இத்திருக்கோயில் உதங்க முனிவரின் உருவச்சிலையையும் காணலாம். பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் திருச்சி- உறையூரில் அமைந்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ளது வாகன வசதிகள் உள்ளன.