பதிவு செய்த நாள்
25
ஜன
2016
06:01
வாழ்வியலின் அடிப்படைச் செய்திகளை எளிதில் நினைவு கொள்ளும் வகையில் தொகுத்துக் கூற எழுந்தவை சதக நூல்களாகும். எடுத்துக்காட்டாக நாம் எப்படி, நீராடுவது, அமர்ந்து உண்பது, இன்ன புருவத்தில் இன்னது செய்ய வேண்டுமென்பது, உண்ணத்தக்கது எது, உண்ணத்தகாதது எது,என்பனவெல்லாம் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
இவ்வகையில் எந்தெந்த இடங்களில் மகாலட்சுமி வாழ்கிறாள் என்றும் பட்டியலிடப்பட்டுக் கூறப்பட்டுள்ளது. குமரேச சதகத்தில் திருமகளின் இருப்பிடங்களைக் கூறும் பாடலை இங்கே காணலாம்.
கடவா ரணத்திலும் கங்கா சலத்திலும்
கமலா சனந்தன் னிலும்
காகுத்தன் மார்பினும் கொற்றவ ரிடத்திலும்
காலியின் கூட்டத்திலும்
நடமாடு பரியிலும் பொய்வார்த்தை சொல்லாத
நல்லோ ரிடந்தன் னிலும்
நல்லசுப லட்சண மிகுந்தமனை தன்னிலும்
ரணசுத்த வீரர்பாலும்
அடர்கே தனத்திலும் சுயம்வரந் தன்னிலும்
அருந்துளசி வில்வத்திலும்
அலர்தரு கடப்பமலர் தனிலும்இர தத்திலும்
அதிககுண மான ரூப
மடவா ரிடத்திலும் குடிகொண்டு திருமாது
மாறா(து) இருப்பள் அன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
பொருள்: வலிய அழகிய யானைகளிலும் கங்கை நீரிலும், தாமரை ஆசனத்திலும் திருமாலின் மார்பிலும் மன்னவர்களிடத்திலும், பசுவின் பின்புறத்திலும் நன்கு முற்றி வளர்ந்து காற்றில் நடனமாடும் நெற்பயிர் விளைவிலும், பொய்பேசாத சான்றோர்களிடத்திலும், நல்ல சுபம் பொருந்திய மங்கலம் நிறைந்த வீடுகளிலும், வீரர்களின் தோளிலும், அரசனின் கொடியிலும், பெண்கள் தங்கள் மனதுக்கு உகந்த மணாளனைத் தெரிந்து எடுக்கும் சுயம்வர மண்டபத்திலும், துளசி, வில்வம் ஆகியவற்றிலும், மலர்கள் பூத்துக் குலுங்கும் கடம்ப மரங்களிலும் பழங்களின் சுவையிலும் தேர்களிலும், அதிஅழகும் குணமும் நிறைந்த பெண்களிடத்திலும் திருமகளாகிய மகாலட்சுமி நீங்காது இருப்பாள். (மயில் ஏறி விளையாடும் குகனே, புல்வயல் எனும் தலத்திலுள்ள மலைமீது குடியிருக்கும் குமரேசனே!) இந்த இடங்களை நாம் புனிதமாகப் போற்றிக் கொண்டாட வேண்டும். அதனால் திருமகள் அருள் நம்மை விட்டு நீங்காது நிலையாக இருக்கும்.