பதிவு செய்த நாள்
13
ஆக
2011
11:08
வீரவநல்லூர் : வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோயில் ஆடி மஹோத்சவ திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தி பெருக்குடன் பக்த கோஷம் முழங்கிட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூக்குழி திருவிழா இந்த ஆண்டு கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ, அபிஷேக, அலங்கார தீபாராதனையும், இரவில் சப்பரத்தில் வீதியுலாவும், மகாபாரத உபன்யாசமும் நடந்தது. சிறப்பு நிகழ்ச்சிகளாக திருக்கல்யாணம், காளி அவதாரம், வனவாசம், அர்ச்சுனன் தபசு காட்சி, அரபான் களபலி ஆகியன நடந்தது.விழாவின் சிறப்பு நாளான நேற்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் பால்குடம் வீதியுலாவும், மதியம் கும்பாபிஷேகமும் நடந்தது. பூ வளர்க்கும் இடத்தில் அக்னிக்கு காவல்புரியும் தெய்வமான வீரபுத்திரசுவாமி கன்னி மூலையில் எழுந்தருளினார். கரகம் எடுப்பவர் கோயில் ஹோமகுண்டத்தில் உள்ள பூவை இருகரங்களாலும் அள்ளி துணியில் போட்டு சுற்றுப்பிரகாரத்தை வலம் வந்து பூ வளர்க்கும் இடத்தில் கொட்ட "கோவிந்தா கோஷம் முழங்கிட பூ வளர்க்கப்பட்டது. கோயில் அருகேயுள்ள சங்கிலிபூதத்தாருக்கும் சிறப்பு பூஜை நடந்தது. பூக்குழி இறங்கும் பக்தர்கள் விரதமிருந்து சுந்தரராஜபெருமாள் கோயில் திருக்குளத்தில் நீராடி மஞ்சள் ஆடை அணிந்து அக்னி குண்டத்தை வலம் வந்தனர். குந்தம்மாதேவியும், கரகமும் முதலில் பூக்குழியில் இறங்கிட தொடர்ந்து பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். மெய்சிலிர்க்க வைத்த இந்த பூக்குழி இறங்கும் காட்சியை பல ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு கழித்தனர். வீரவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி விழாவை காண வந்திருந்தனர். விழாவில் டவுன் பஞ்.,தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாக அதிகாரி சங்கரன், ரோட்டரி துணை ஆளுநர் இசக்கி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லிதேவ் ஆனந்த், சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மேற்பார்வையில் செய்யப்பட்டிருந்தது. சுகாதார வசதிகளை டவுன் பஞ்., நிர்வாகம் செய்திருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அக்தார் பாபநாசம் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.