பதிவு செய்த நாள்
28
ஜன
2016
11:01
பழநி: பழநி தைப்பூசத் திருவிழா தெப்ப உற்சவத்துடன் நேற்று நிறைவு பெற்றது. பழநி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 18ம் தேதி பெரிய நாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது.
விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளிலும் சுவாமி புறப்பாடு மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மண்டகப்படி நடைபெற்றது. பழநி, தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தெப்பத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி -தெய்வானையுடன் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசம் நிறைவு: தைப்பூச விழா நிறைவு நாளை முன்னிட்டு நேற்று காவடிகளுடன் ஏராளமான பக்தர்கள் பழநியில் குவிந்தனர். பழநி தைப்பூச ஜன.,18ல் துவங்கி ஜன.,27வரை நடந்தது. இதில் வெளிநாடு, மாநிலங்களிலிருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பலர் பங்கேற்றனர். மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், சேலம், கரூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைசேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். காரைக்குடி நகரத்தார், நாட்டர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் அலகுகுத்தியும், காவடிகள் சுமந்தும், பால் குடங்களுடனும் வந்தனர். நேற்று விழா நிறைவு நாளைமுன்னிட்டு தாராபுரம், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கிராம மக்கள் குதிரை, மாட்டு வண்டிகளில் வந்தனர். பழநி சண்முகநதியில் ஏராளமான பக்தர்கள் நீராடி காவடி களுடன் ஆட்டம் பாட்டத்துடன் பழநிகோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா நேற்றுடன் முடிந்தாலும் இன்னும் பழநி,-திண்டுக்கல், உடுமலை ரோட்டில் பக்தர்கள் பலர் பாதயாத்திரை பழநி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.