பதிவு செய்த நாள்
28
ஜன
2016
11:01
சித்தர்களும், மகான்களும் பிறந்த புண்ணிய பூமி என்ற பெருமை புதுச்சேரிக்கு உண்டு. அரவிந்தர், சங்கர்தாஸ் சுவாமிகள், கம்பளிசாமி உள்ளிட்டோர் வரிசையில் குரு சித்தானந்த சுவாமிகள் மிகவும் குறிப்பிடத்தக்க மகானாக இங்கு வாழ்ந்தார். கருவடிக்குப்பத்தில் ஜீவசமாதி அடைந்து, கோவில் கொண்டுள்ள இடத்திற்கு வருவோருக்கு, மன அமைதி, தெளிவான சிந்தனை, தெளிவான நோக்கத்தை வழங்கி வருகிறார். ஜாதி, மத பேதமின்றி அனைவரும் கூடும் சமத்துவ ஆலயமாக இக்கோவில் விளங்கி வருகிறது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் சித்தானந்த சுவாமிக்கு பக்தர்கள் ஏராளம். வெளிநாடு செல்வோர் பலரும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
குருபூஜை விழா: சித்தானந்த சுவாமி, 1837ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி ஜீவசமாதி அடைந்த தினம் குருபூஜை விழாவாக இன்றளவும், மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த 178வது குரு பூஜையில், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், இங்கு, கார்த்திகை மாதத்தில், 108 சங்கு அபிஷேகம் மற்றும் சிவராத்திரி விழா விமர்சையாக நடக்கிறது. வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை காண திரளான பக்தர்கள் வருகின்றனர். கோவிலில், தினசரி காலை 7:30 மணிக்கு சாலை சந்தி, 10:00 மணிக்கு 2ம் கால பூஜை, 11:30 மணிக்கு உச்சிக்காலம், மாலை 6:00 மணிக்கு சாயரட்சை, 7:30 மணிக்கு தேசாந்தி, 9:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடக்கிறது. கோவிலில் சுவாமியை தரிசித்துவிட்டு செல்வோர், தியான மண்டபத்திற்கு சென்று, மன அமைதியடைந்து நிம்மதியுடன் செல்கின்றனர். கோவில் பிரகாரத்தில் உள்ள புற்றுகள், மரங்கள் தெய்வத்தன்மை உடையதாக கருதப்பட்டு, குழந்தை பாக்கியம், திருமண தடை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை நிறைவேற்ற, பக்தர்கள் சீட்டு எழுதி கட்டி வருகின்றனர்.