பதிவு செய்த நாள்
28
ஜன
2016
11:01
பந்தலுார்: பந்தலுார் அருகே கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவில் திருவிழாவில் பக்தர்களின் பறவைக்காவடி ஊர்வலம் பார்வையாளர்களை கவர்ந்தது. கொளப்பள்ளி குறிஞ்சிநகர் முருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த 19ம்தேதி காலை 7.30மணிக்கு முகூர்த்த கால்நடுதல், கிருத்திகை பூஜையுடன் துவங்கியது. 23ல், சிறப்பு பூஜைகளுடன் 108-சங்காபிஷேகம், மாலை 5:00மணிக்கு திருத்தேர் ஊர்வலம் நடந்தது. தைப்பூச நாளில் காலை 9:00மணிக்கு மழவன் சேரம்பாடியிலிருந்து அன்னக்காவடி ஊர்வலம், மதியம் அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு ஏலமன்னா நீர்த்தேக்கத்திலிருந்து பறவைக்காவடி, பக்தர்களின் காவடி ஊர்வலம் நடந்தது. இதில் எட்டு பேர் பங்கேற்ற பறவைக்காவடி ஊர்வலம் பார்வையாளர்களை கவர்ந்தது. தொடர்ந்து வானவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கூடலுார் ராமகிருஷ்ணா முதி யோர் இல்லத்துக்கு வேட்டி-சேலையும், ஜீவன் ரக்ஷெனா குழந்தைகள் காப்பகத்திற்கு சீருடையும் கோவில் கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகளும், 10:00 மணிக்கு கொடியிறக்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெற்றது. விழாவுக்காக, ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் தியாகராஜ், கவிந்தன், அசோக், கந்தசாமி, ராஜேந்திரன், நாகராஜ், சிங்காரம் ஆகியோர் தலைமையில் ஊர்மக்கள் செய்திருந்தனர். பூஜைகளை அர்ச்சகர் திவேல் தலைமையிலான குழுவினர் செய்தனர்.
* கூடலுார், ஓவேலி வனச்சோதனை சாவடி அருகேயுள்ள சக்தி முன்னீஸ்வரன் கோவில் ஆண்டு விழா, 22ல் துவங்கியது. தைப்பூச தினத்தன்று கூடலுார் விநாயகர் கோவிலிருந்து பறவை காவடி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.