பதிவு செய்த நாள்
28
ஜன
2016
11:01
அகமத்நகர்: மஹாராஷ்டிராவில், தடையை மீறி, சனீஸ்வரன் கோவிலில் நுழைய முயன்ற பெண்களுக்கு எதிராக, கிராம மக்கள், கண்டன தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அகமது நகர் மாவட்டம், சிங்னபூர் கிராமத்தில் சனீஸ்வரர் கோவில் உள்ளது. வெட்டவெளியில், கற்பீடத்தின் மீது, 5 அடி உயரம் உள்ள சனீஸ்வர பகவான், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பீடத்தின் மீதேறி, சனீஸ்வரருக்கு பூஜை செய்ய, பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து, 2015ல், பூமாதா பெண்கள் படை, கோவிலுக்குள் நுழைய முயன்றது. அதை, போலீசார் முறியடித்து விட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு, பூமாதா படையைச் சேர்ந்த, 400க்கும் அதிகமான பெண்கள், சனீஸ்வரர் சிலைக்கு, தடையை மீறி பூஜை செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, பஸ்சில் ஏற்றி, புனேவுக்கு திருப்பி அனுப்பினர். தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை கண்டித்து, சிங்னபூர் கிராம சபை சார்பில், நேற்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்களின் சம உரிமைக்கு எதிரான கருப்பு நாள் இது. கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கும்படி, மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிசை சந்தித்து, கோரிக்கை விடுத்துள்ளோம். தேசாய், தலைவி பூமாதா பெண்கள் படை.