பதிவு செய்த நாள்
28
ஜன
2016
11:01
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், நேற்றுமுன்தினம் இரண்டாம் நாள் தைப்பூச தேரோட்டம் நடந்தது.இக்கோவிலில் கடந்த ஜன. 17ம் தேதி, தைப்பூச தேரோட்ட விழா கொடியேற்றுத்துடன் துவங்கியது.இதனை தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேலாயுதசாமி உற்சவ மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருளி, பலி பீட பூஜையும், பொன் மலையை சுற்றி கிரிவலமும் நடந்தது. பின், கடந்த 24ம் தேதி, தைப்பூசத்தை ஒட்டி, மாலை, 4:30 மணிக்கு வேலாயுதசாமி, வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்தியுடன் தேரில் எழுந்தருளினார். முதல் நாள் தேரோட்டம் மலை அடிவாரத்தில் துவங்கி, மலையின் அக்னி மூலையான சிவலோகநாதர் கோவில் அருகே தேர் நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாளில் மாலை, 4:00 மணிக்கு சிவலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, அங்கிருந்து சீர் கொண்டு வந்தனர். பின், இரண்டாம் நாள் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதனை பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, தேர் வடம் பிடித்து இழுத்துச்சென்று, மலையின் வாயு மூலையான கிருஷ்ணசாமிபுரம் பகுதியில் தேர் இரவு, 7:00 மணியளவில் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை, 4:30 மணிக்கு மூன்றாம் நாள் தேரோட்டம் நடந்தது. தேர் வரும் வழியில், மின் கம்பங்களின் ஒயர்களை மின்வாரியத்தினர் கழற்றிவிட்டு, தேர் சென்றவுடன் மீண்டும் மின் கம்பத்தில் ஒயர்கள் இணைத்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுப்பட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர், செயல் அலுவலர் வெண்மணி மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.