பதிவு செய்த நாள்
29
ஜன
2016
11:01
மாமல்லபுரம்: மாமல்லபுரம், அர்ஜுனன் தபசு சிற்பங்கள் உள்ள சாலையில், போக்குவரத்திற்கு தடை விதிக்காததால் சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். மாமல்லபுரத்தில், பாறை புடைப்பு வகை சிற்பமான, அர்ஜுனன் தபசு சிற்பம், உயரமான பாறையில் செதுக்கப்பட்டு, தரைமட்டத்திற்கு கீழும் அமைந்துள்ளது. சிற்பமுள்ள பாறையின் முன் அகழி உள்ளது. அந்த அகழிக்குள் இறங்கி சிற்பங்களை காண தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அகழியின் ஓரத்தில் சாலையில் நின்று, சுற்றுலா பயணிகள் சிற்பத்தை காணுகின்றனர். சிலர் புகைப்படங்கள் எடுக்கின்றனர். இந்நிலையில், அகழியின் முன் சுற்றுலா பயணிகள் நிற்க தனியாக இட வசதி ஏற்படுத்தப்படாததால், நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, மேற்கு ராஜ வீதியில் நிற்க வேண்டியுள்ளது. அந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நின்று சிற்பங்களை ரசிக்க வேண்டியுள்ளது. புகைப்படம் எடுப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மேலும், பயணிகள் அகழியில் விழாமல் இருக்க, பல ஆண்டுகளுக்கு முன், சாலையை ஒட்டி, அகழியின் விளிம்பில், சிற்பங்களை மறைக்காத வகையில், இரண்டு அடி உயர தடுப்புச்சுவரை, தொல்லியல் துறை அமைத்திருந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன், அந்த சுவரை அகற்றிவிட்டு, துருப்பிடிக்காத இரும்புக் கம்பியாலான தடுப்பை அமைக்க முயன்றனர். அப்போது, சுற்றுலா வழிகாட்டிகளின் எதிர்ப்பால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது தடுப்பில்லாததால் அகழியின் விழிம்பில் நிற்கும் பயணிகள் அவ்வப்போது உள்ளே விழுகின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: மேற்கு ராஜ வீதி சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிப்பதால், உள்ளூர் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாது. அங்கிருந்து 300 மீட்டர் துாரத்திலுள்ள சாலையில் அந்த வாகனங்களை மாற்றிவிட முடியும்.சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, அந்த சாலையில், கிருஷ்ண மண்டப பகுதியிலிருந்து, ஆணைக்கட்டி தெரு வரை, போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும். அதேபோல், அகழியின் விளிம்பில் சாலையையொட்டி தடுப்பு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.