புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் கன்னித் திருவிழா நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை சப்த கன்னிகள் கோவிலில், விவசாயம் தழைக்கவும், இளைஞர்கள், இளம் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், கிராமம் செழிக்கவும் வேண்டி ஆண்டுதோறும் தை மாதம் கன்னித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த 17ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தொடர்ந்து தினமும் இரவு சப்த கன்னிகள் மற்றும் காவல் தெய்வங்களான சாட்டைக்காரன், அக்னி, கரகம் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. முக்கிய விழாவான கன்னித்திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கன்னிகள் மற்றும் காவல் தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, பம்பை, உடுக்கை, ஆடலுடன் இப்பகுதியில் உள்ள கோவில் குளத்தில் கன்னித்திருவிழா நடந்தது.இதில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.