பழநி கோயிலில் பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2016 10:02
பழநி: பழநி மலைக் கோயிலில் குவிந்த பக்தர்கள் நான்கு மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணிசுவாமியை தரிசனம் செய்தனர்.
ஞாயிறு பொது விடுமுறை என்பதால் நேற்று தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்தது. அடிவாரம் பூங்காரோடு, அய்யம்புள்ளி ரோடு, கிரிவீதிகளில் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி பருவராஜகுல மக்கள் ஆயிரக்கணக்கில் மலைக்கோயிலில் குவிந்தனர். இதனால் பொதுதரிசன வழியில் செல்லும் பக்தர்கள் வெளிப்பிரகாரம்வரை நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்தனர். பின்பு மூலவர் ஞானதண்டாயுபாணியை தரிசனம் செய்தனர். பாதவிநாயகர்கோயில், சன்னதிவீதியில் பக்தர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. தடையை மீறி வாகனங்கள் சென்றதால், காவடி, பால்குடங்கள் எடுத்து கூட்டமாக வந்த பக்தர்கள் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர். விடுமுறைநாட்களில் சன்னதிவீதி, பாதவிநாயகர்கோயில், வடக்குகிரிவீதியில் தடையை மீறி செல்லும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.