பதிவு செய்த நாள்
01
பிப்
2016
11:02
திருக்கோவிலுார்: திருவண்ணாமலை, பகவான் யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், 200வது இலவச மருத்துவ முகாம் மற்றும் சாது போஜன விழா, வரும், 13ம் தேதி நடக்கிறது. திருவண்ணாமலை, பகவான் யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், 1999 ஜூலை, 11ம் தேதி, இலவச மருத்துவ முகாம் மற்றும் சாது போஜனத்தை, பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜ் துவக்கி வைத்தார். மருத்துவ முகாம் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் நடக்கும் முகாமில், 1,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, இலவச சிகிச்சை பெறுகின்றனர். அதேபோல், தினசரி நடக்கும் சாது போஜனத்திலும் ஏராளமான சாதுக்களுக்கு அன்னம் படைக்கப்படுகிறது. 200வது மாத மருத்துவ முகாம் மற்றும் சாது போஜன விழா, வரும், 13ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. மாதேவகி வரவேற்கிறார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கண்ணன், முரளீதர சுவாமிகள், டாக்டர் ராமநாதன், அனுவெண்ணிலா மற்றும் சுவாமிநாதன் சிறப்புரைஆற்றுகின்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி அருணாச்சலம் உத்தரவின் படி, ஆசிரம நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ராமநாதன் கூறியது: பகவான் யோகி ராம் சுரத்குமார், சாதுக்களுக்கு உணவளிப்பதை பெரும் பாக்கியமாக கூறுவார். அவரால் துவக்கி வைக்கப்பட்ட இலவச மருத்துவ முகாம் மற்றும் சாது போஜனம், அவரது ஆசியுடனே, வரும், 13ம் தேதி, 200வது முகாமாக நடக்கிறது. இங்கு, ஜாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது; அனைத்து மதத்தினரும் ஆசிரமத்திற்கு வருகின்றனர்.
கும்பாபிஷேகம்: பகவான் மீது உண்மையான பக்தி மட்டும் இருந்தால் போதும், வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெறலாம். ஆசிரமத்திற்கு குடமுழுக்கு நடந்து, 12 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மார்ச், 25ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா, 23ல் துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. இதில் பரனுார் கிருஷ்ணபிரேமி சுவாமிகள், முரளீதர சுவாமிகள், நித்யானந்தகிரி சுவாமிகள், ஜயகிருஷ்ணதீக்ஷிதர் மற்றும் ரமண சரணதீர்த்த நொச்சூர் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு, டாக்டர் ராமநாதன் கூறினார்.அறக்கட்டளை உறுப்பினர்கள் விஜய லஷ்மி, மாதேவகி, சுவாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.