பதிவு செய்த நாள்
01
பிப்
2016
12:02
காரைக்குடி: பொதுத்தேர்வு எழுதும் மாணவர் களுக்காக, காரைக்குடி சீரடி சாய் சேவா சங்கம் சார்பில் ஹயக்கிரீவர், தட்சிணா மூர்த்தி ஹோமம் நடத்தப்பட்டது. காரைக்குடி சீரடி சாய் சேவா சங்கம் சார்பில் ஆன்மிக கருத்தரங்கு கடந்த 29-ம் தேதி செக்காலை சங்கர மணிமண்டபத்தில் தொடங்கியது. அன்று காலை 10 மணிக்கு தேவி மகாத்மியம் சுவாசினி பூஜை, கோ பூஜை நடந்தது. மாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு நன்னிலம் ராஜகோபால கணபாடிகள் தலைமை வகித்தார். ரவிசர்மா வரவேற்றார். நிகழ்ச்சியில் பிச்சை குருக்கள், வருமான வரித்துறை துணை ஆணையர் சங்கரநாராயணன், ராம்மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நேற்று முன்தினம் சுந்தரகாண்டம் பாராயணம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வை பயமின்றி எழுதவும், எழுத்தாற்றல் வளம்பெறவும் வேண்டி ஹயக்கிரீவர், தட்சிணாமூர்த்தி ஹோமம் நடந்தது. வேத விற்பன்னர்கள், ஆன்மிக சான்றோர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் நோட்டு பேனா, புத்தகம் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. சத்யசாய் சேவா சமிதி சுவாமிநாதன், ஆடிட்டர் பாலாஜி, ஆசிரியர் சுந்தரராமன், சங்கர மணிமண்டபம் மேலாளர் விஸ்வநாத அய்யர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அருகிலுள்ள யாதவ மண்டபத்திலும் ஹயக்கிரீவ,சுதர்சன யாகங்களை தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர் நடத்தினர். பிள்ளையார்பட்டி தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பெருமாள் கோயில் ரமேஷ் பட்டாச் சார்யார் தலைமையில் ஹோமம் துவங்கியது. மாநில தலைவர் ஸ்ரீராமன், பொதுச் செயலர் பம்மல் ராம கிருஷ்ணன், பொருளாளர் வெங்கட் ராமன், மாநில துணைத் தலைவர் ஆதித்யா ராமசாமி இளைஞர் அணி சுரேஷ், மதுரை மாவட்ட தலைவர் பட்டா பிராமன், கோவை பொதுச் செயலர் விஜயன், மாவட்டக் கவுன்சிலர் செல்வி, ஊராட்சி தலைவர் லெட்சுமி, மாவட்ட கிளை நிர்வாகிகள் கோபு, கிருஷ்ண மூர்த்தி,மணிவண்ணன், மாதவன், சீனிவாசன் பங்கேற்றனர். ஏற்பாட்டினை மாவட்டத் தலைவர் ராஜப்பா, பொதுச் செயலர் வைத்திய நாதன்,பொருளாளர் பரமேஸ்வரன், கிளை தலைவர் கோஷ்டி பூரணாச்சாரியர் செய்தனர்.